

சென்னை:
சென்னை கிண்டியில் உள்ள ஐ.டி.சி. கிராண்ட் சோழா நட்சத்திர ஓட்டலில் கடந்த டிசம்பர் 15ந்தேதி ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து 15 நாட்களில் இந்த எண்ணிக்கை 85 ஆக அதிகரித்தது. இதையடுத்து சென்னையில் உள்ள அனைத்து நட்சத்திர ஓட்டல்களில் உள்ள ஊழியர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள பெருநகர சென்னை மாநகராட்சி உத்தரவிட்டது.
அதன் அடிப்படையில் செய்யப்பட்ட பரிசோதனை நேற்று (திங்கட்கிழமை) வரை 125 ஓட்டல் ஊழியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று மேலும் 11 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:
சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் இன்று 1,743 ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 11 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதுவரை 8 ஆயிரத்து 723 ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 136 ஊழியர்களுக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.