சென்னையில் 2-வது விமான நிலையம் அமைக்க தமிழக அரசிடம் நிலம் கேட்டு உள்ளோம்

சென்னையில் 2-வது விமான நிலையம் அமைக்க தமிழக அரசிடம் நிலம் கோரி உள்ளோம் என இந்திய விமான நிலையங்களின் ஆணைய தலைவர் குருபிரசாத் மோகபத்ரா தெரிவித்தார்.
சென்னையில் 2-வது விமான நிலையம் அமைக்க தமிழக அரசிடம் நிலம் கேட்டு உள்ளோம்
Published on

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய ஆணையக குடியிருப்பில் உள்ள தோட்டத்தில் மூலிகை செடிகளை இந்திய விமான நிலையங்களின் ஆணையக தலைவர் குருபிரசாத் மோகபத்ரா நட்டு வைத்தார்.

இதில் தென்மண்டல விமான நிலைய இயக்குனர் ஸ்ரீகுமார், சென்னை விமான நிலைய இயக்குனர் சந்திரமவுலி, தேசிய சித்தா ஆராய்ச்சி மைய இயக்குனர் பானுமதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

பின்னர் இந்திய விமான நிலையங்களின் ஆணையக தலைவர் குருபிரசாத் மோகபத்ரா நிருபர்களிடம் கூறியதாவது:-

தென் மண்டலத்தில் உள்ள விமான நிலையங்களை ஆய்வு செய்ய வந்து உள்ளேன். சென்னை விமான நிலையத்தில் ஆய்வு செய்தேன். விமான நிலைய ஆணையக குடியிருப்பில் மூலிகை செடிகள் நடப்பட்டது.

சென்னை விமான நிலையத்தில் விரிவாக்கப் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. பன்னாட்டு மற்றும் உள்நாட்டு முனையங்களுக்கு இடையே உள்ள பழைய கட்டிடத்தை இடித்து புதிய முனையம் அமைக்கும் பணி நடக்கிறது. ரூ.2,100 கோடியில் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது.

நவீன வசதிகளுடன் கூடிய அடுக்குமாடி கார் நிறுத்தம் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது. இந்த பணிகள் 42 மாதங்களில் முடிக்கப்படும். செயல்பட்டு கொண்டு இருக்கும் விமான நிலையத்தில் கட்டுமான பணிகள் நடப்பதால் பயணிகளுக்கும், ஆணையகத்துக்கும் சவாலாகத்தான் இருக்கும்.

விமான நிலையத்தில் போக்குவரத்து தடைஇன்றி இருக்க போலீஸ்துறைக்கு தகவல் தரப்பட்டு உள்ளது. கட்டுமான பணிகள் நடப்பதால் சற்று சிரமங்கள் இருக்கத்தான் செய்யும். இதனால் கட்டுமான பணிகள் முடிக்கப்படும் வரை பயணிகள் விரைவாக வந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும். விமான நிலையங்களில் நெரிசலை போக்க விரைவில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது.

இந்தியாவில் விமான நிலையங்கள் அதிகரிக்கப்பட்டு வருகிறது. திருச்சி விமான நிலையத்தில் விரிவாக்கப் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. விமான நிலையத்தில் விமான நிறுத்துமிட வசதிகளுடன் உருவாக்கப்படுகிறது.

சாதாரண மக்களும் விமானத்தில் பயணம் செய்ய உதான் திட்டம் தொடங்கப்பட்டது. உதான் திட்டத்தில் பல நகரங்களில் விமான நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. கடந்த 4 ஆண்டுகளில் விமான நிலையங்களில் ரூ.20 ஆயிரம் கோடி செலவில் பல்வேறு விரிவாக்க திட்டப்பணிகள் செய்யப்பட்டு உள்ளன.

தமிழகத்தில் புதிதாக விமான நிலையங்கள் ஏற்படுத்தும் திட்டம் எதுவும் இல்லை. ஆனால் சென்னைக்கு 2-வது விமான நிலையம் அமைக்க திட்டமிட்டு உள்ளோம். இதுபற்றி தமிழக அரசிடம் பேசி வருகிறோம். 2-வது விமான நிலையத்துக்கு சரியான இடத்தை தேர்வு செய்து தருமாறு கோரிக்கை வைத்து உள்ளோம்.

தற்போதைய நிலையில் அதிகமான பெரிய விமானங்களை இயக்க முடியவில்லை. டெல்லி, மும்பை நகரங்களில் 2-வது விமான நிலையங்கள் அமைக் கப்பட்டு உள்ளது. சென்னை, கொல்கத்தா ஆகிய நகரங்களில் 2-வது விமான நிலையங்கள் அமைக்க மாநில அரசுகளுடன் பேசி வருகிறோம்.

ஆமதாபாத், புவேனஸ்வர், புனே, கோவா ஆகிய நகரங்களிலும் 2-வது விமான நிலையங்கள் வரவுள்ளன. தமிழக அரசிடம் நிலங்களை கேட்டு உள்ளோம். தமிழக அரசு நிலங்களை தந்தால் சென்னையில் 2-வது விமான நிலையம் அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com