‘உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு வாக்களியுங்கள்’ மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்று மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
‘உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு வாக்களியுங்கள்’ மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
Published on

சென்னை,

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் 27 மற்றும் 30-ந்தேதிகளில் நடைபெறவுள்ளதையொட்டி, தி.மு.க. கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்கக்கோரி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், தனது முகநூல், டுவிட்டர், யூ டியூப் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களில் நேற்று காணொலி ஒன்று பதிவிட்டுள்ளார். அதில் அவர் பேசியிருப்பதாவது:-

தமிழகத்தில் 2016-ம் ஆண்டு நடைபெற வேண்டிய உள்ளாட்சித் தேர்தல் தற்போதுதான் நடைபெறுகிறது. இதுவரை தமிழகத்தில் ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி என எல்லா இடங்களிலும் ஒரே சமயத்தில்தான் உள்ளாட்சித்தேர்தல் நடைபெற்றுள்ளது. தற்போது ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் தேர்தல் என்கிறார்கள்.

நகரங்களுக்கு எப்போது தேர்தல் நடத்துவார்கள் எனத் தெரியாது. ஏன் நடத்துவார்களா என்பதே தெரியாது. கிராமங்களிலாவது முறையாகத் தேர்தலை நடத்துகிறார்களா என்றால் அதுவும் இல்லை. உயர்நீதிமன்ற உத்தரவுப்படி வார்டு மறுவரையறை, இடஒதுக்கீடு என எதையுமே இதுவரை செய்யவில்லை.

அதுமட்டுமின்றி மேயர், நகராட்சித் தலைவர், பேரூராட்சித் தலைவர் பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் என்று திடீர் அறிவிப்பை வெளியிட்டு அதன் மூலம் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளார்கள். இப்படி குழப்பத்திற்கு மேல் குழப்பத்தையும், குளறுபடிகளையும் செய்துதான், ஊராட்சித் தேர்தலை நடத்துகிறார்கள்.

உள்ளாட்சித் தேர்தல் முறையாக நடைபெற்றிருந்தால் இதில் 60 சதவீத குறைகள் எப்போதோ தீர்க்கப்பட்டிருக்கும். தேர்தலை உரிய காலத்தில் நடத்தாதது யார் தவறு?. அ.தி.மு.க. அரசின் தவறுதானே. எல்லா இடங்களிலும் குடிநீர் வசதி, போக்குவரத்து வசதி, சாக்கடை வசதி போன்ற அடிப்படை வசதிகள் எதுவுமே சரியாக இல்லை.

டெங்கு விழிப்புணர்வுப் பிரசாரம் செய்வதாகக் கூறி அதிலும் கொள்ளை அடித்தார்கள். இப்படி கொள்ளை அடிக்க வசதியாகத்தான், உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் காலம் கடத்திவந்தார்கள். அதற்கு 2 காரணங்கள் முக்கியமானவை. தேர்தல் நடந்தால் தி.மு.க. வெற்றி பெற்றுவிடும் என்ற பயம் முதல் காரணம்.

உள்ளாட்சிப் பிரதிநிதிகள் வந்துவிட்டால் வழக்கம்போலக் கொள்ளை அடிக்க முடியாது என்பது 2-வது காரணம். இதனால் துன்பப்படுவது என்னவோ மக்கள்தான். தி.மு.க. ஆட்சி என்றாலே உள்ளாட்சியில் நல்லாட்சி நடத்திய ஆட்சி என்பதை மக்களே ஏற்றுக்கொள்வார்கள்.

கருணாநிதி ஆட்சியில் தமிழகம், அரிசி, கரும்பு, மரவள்ளிக்கிழங்கு உற்பத்தி, தொழில் வளர்ச்சி என்று பலவகையிலும் முதலிடத்தில் இருந்தது. ஆனால் தற்போது ஊழலில், லஞ்சத்தில், டெங்கு காய்ச்சலில், காசநோயில் என எவையெல்லாம் மக்களுக்கு எதிரானதோ அவற்றில் எல்லாம் முதலிடமாக உள்ளது. இதுதான் எடப்பாடி பழனிசாமி அரசின் சாதனை. இதனால் மக்களுக்குத்தான் வேதனை.

எந்த மாநில முதல்-அமைச்சர் மீதும் பதவியில் இருக்கும்போதே கொலைப் புகார் வந்ததில்லை. கொள்ளைப் புகார் வந்ததில்லை. இங்கு முதல்- அமைச்சர், துணை முதல்- அமைச்சர், அமைச்சர்கள் எனப் பலர் மீதும் ஊழல் புகார்கள், விசாரணைகள், வழக்குகள் என தமிழ்நாட்டு அமைச்சரவையே ஒரு கிரிமினல் கேபினெட்டாக இருக்கிறது. இது இந்திய அளவிலான அவமானம் இல்லையா?

இப்படிப்பட்டவர்களிடம் இருந்து நாட்டை மீட்பதற்கான முன்னோட்டம்தான் இப்போது வந்துள்ள உள்ளாட்சித் தேர்தல். ஊழல் - அவர்கள் செய்யும் வேலை. கொள்ளை - அவர்களுடைய கொள்கை. அதனால், அவர்களிடம் இருந்து மக்களைக் காப்பதுதான் நமது கடமை. எனவே, இந்த ஊழலாட்சிக்கு முடிவுகட்ட உள்ளாட்சித்தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு வாக்களிப்பீர். நாளை நல்லாட்சி அமைய உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு வாக்களிப்பீர். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com