

நாகர்கோவில்,
இந்தியா முழுவதும் தற்போது நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தல் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மூலம் நடத்தப்பட்டு வருகிறது. வருங்காலங்களில் உள்ளாட்சி தேர்தலிலும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை பயன்படுத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டிருந்தது.
அதன்படி தமிழகத்தில் முதன்முறையாக கன்னியாகுமரி மாவட்டம் மேல்புறம் ஒன்றியத்தில் நேற்று மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மூலம் வாக்குப்பதிவு நடத்தப்பட்டது.
இந்த ஒன்றியத்தில் மட்டும் 29 ஆயிரத்து 687 ஆண் வாக்காளர்களும், 31 ஆயிரத்து 328 பெண் வாக்காளர்களும், 3-ம் பாலினத்தவர்கள் 6 பேரும் என மொத்தம் 61 ஆயிரத்து 21 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களுக்காக 114 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன.
ஒவ்வொரு வாக்காளரும் ஊராட்சி தலைவருக்கு ஒரு ஓட்டும், ஊராட்சி வார்டு உறுப்பினருக்கு ஒரு ஓட்டும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினருக்கு ஒரு ஓட்டும், மாவட்ட பஞ்சாயத்து வார்டு உறுப்பினருக்கு ஒரு ஓட்டும் என மொத்தம் 4 வாக்குகள் அளித்தனர். இதற்கு வசதியாக அங்குள்ள ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் ஒரு கட்டுப்பாட்டு கருவி எந்திரத்துடன் 4 வாக்குப்பதிவு எந்திரங்கள் பொருத்தப்பட்டு இருந்தன.
இதில் ஊராட்சி தலைவரை தேர்ந்தெடுப்பதற்காக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு எந்திரத்தில் இளம் சிவப்பு நிற தாளும், ஊராட்சி வார்டு உறுப்பினருக்கான வாக்குப்பதிவு எந்திரத்தில் வெள்ளை நிறத்தாளும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்குரிய வாக்குப்பதிவு எந்திரத்தில் பச்சை நிறத்தாளும், மாவட்ட பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிக்குரிய வாக்குப்பதிவு எந்திரத்தில் மஞ்சள் நிறத்தாளும் பொருத்தப்பட்டு இருந்தன.
வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடந்தது. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மூலம் நடைபெற்ற 114 வாக்குச்சாவடிகளிலும், காலையில் இருந்து விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடந்தது. ஒன்றிரண்டு வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு தொடங்கிய சிறிது நேரத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுதாகின.
அதில் மருதங்கோடு, ஆபிரகாம் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியும் ஒன்று. இந்த பள்ளி வளாகத்தில் மொத்தம் 7 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. அதில் 80-ம் எண் கொண்ட வாக்குச்சாவடியில் காலை 6 மணிக்கு வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மூலம் மாதிரி வாக்குப்பதிவு நடந்தது. அப்போது எந்திரங்களில் எந்தவித கோளாறும் நடைபெறவில்லை. இதையடுத்து காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்காளர் ஏராளமானோர் வந்து வாக்களித்துக் கொண்டிருந்தனர்.
இந்தநிலையில் காலை 9.30 மணியளவில் கட்டுப்பாட்டு கருவியுடன் பொருத்தப்பட்டிருந்த 4 வாக்குப்பதிவு எந்திரங்களில் ஒன்று திடீரென பழுதானது. இதனால் அங்கு வாக்குப்பதிவு தடை பட்டது. இதனையடுத்து அங்கிருந்த வாக்குப்பதிவு அலுவலர் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். பின்னர் வாக்குப்பதிவு எந்திரம் சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. எந்திரம் திடீரென பழுதானதால் மணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டிருந்தது. பிறகு 10 மணிக்கு மீண்டும் வாக்குப்பதிவு தொடங்கியது.
இதற்கிடையே மாவட்ட கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான பிரசாந்த் வடநேரே மருதங்கோடு ஆபிரகாம் பள்ளியில் அமைக்கப்பட்டு இருந்த வாக்குச்சாவடிகளை ஆய்வு செய்தார்.
எந்திர கோளாறு ஆன வாக்குச்சாவடியிலும் எந்திர பழுது தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். தமிழகத்தில் முதல் முறையாக மேல்புறம் ஒன்றியத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மூலம் உள்ளாட்சி தேர்தலில் வாக்குப்பதிவு வெற்றிகரமாக நடத்தப்பட்டது.