பொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் திருமாவளவன் பேட்டி

அரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று திருமாவளவன் கூறினார்.
பொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் திருமாவளவன் பேட்டி
Published on

கும்பகோணம்,

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கும்பகோணத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றிபெறும். இதனால் தமிழகத்திலும், மத்தியிலும் ஆட்சி மாற்றம் ஏற்படும். தமிழகத்தில் நடைபெற்ற தேர்தலில் அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. தோல்வி பயத்தால் பல்வேறு இடங்களில் வன்முறையை கட்டவிழ்த்து விட்டது.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள பொன்பரப்பி பகுதியில் காலை 10 மணிக்கு ஆதிதிராவிட மக்களை வாக்களிக்கவிடாமல் தடுத்துள்ளனர். இந்த வன்முறையால் குடிசைகள் மற்றும் மோட்டார் சைக்கிளை தீ வைத்து எரித்துள்ளனர். பலர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தஞ்சை மாவட்டத்தில் மரத்துறை, நீலத்தநல்லூர் போன்ற பகுதிகளிலும் ஆதிதிராவிட மக்கள் மீது வன்முறை நடைபெற்றுள்ளது. அரசியல் ஆதாயம் தேட அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. இந்த வன்முறையை நிகழ்த்தியுள்ளது. அரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் 2 ஆயிரம் கள்ள ஓட்டுகள் போடப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் மட்டும் 83 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்று உள்ளது. எனவே பொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும்.

இதுகுறித்து சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரியான அரியலூர் மாவட்ட கலெக்டரை சந்தித்து மனு அளிக்க உள்ளேன். சிதம்பரம் தொகுதியில் எனது வெற்றிக்கு தி.மு.க. உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் சிறப்பாக பணியாற்றினர். தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இணைந்து விடக்கூடாது என்று பலர் முயற்சித்தனர். அதை நாங்கள் தெளிவாக கையாண்டு வெற்றி பெற்றுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com