

சென்னை,
சென்னையைச் சேர்ந்த நரம்பியல் டாக்டர் சுப்பையா, கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பர் 14-ந் தேதி ராஜா அண்ணாமலைபுரத்தில் கூலிப்படையினரால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமத்தில் உள்ள சொத்து தொடர்பாக இந்த கொலை அரங்கேறியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட இந்த வழக்கில் ஆசிரியர் பொன்னுசாமி, அவரது மனைவி மேரி புஷ்பம், அவர்களது மகன்கள் வக்கீல் பாசில், என்ஜினீயர் போரிஸ், பாசிலின் நண்பர்களான வக்கீல் வில்லியம், டாக்டர் ஜேம்ஸ் சதீஷ்குமார், கூலிப்படையைச் சேர்ந்த ஏசுராஜன், முருகன், செல்வப்பிரகாஷ், அய்யப்பன் ஆகிய 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் கைதான அய்யப்பன் அப்ரூவர் ஆனார். வழக்கு விசாரணை சென்னை முதலாவது கூடுதல் செசன்ஸ் கோர்ட்டில் நடைபெற்றது.
பல ஆண்டுகளாக நடைபெற்றுவந்த இந்த வழக்கை தினசரி விசாரணை என்ற அடிப்படையில் ஜூலை மாதத்துக்குள் விசாரித்துமுடிக்க வேண்டும் என்று ஜூன் மாதம் 1-ந் தேதி சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
அதன்படி, தினம்தோறும் இந்த விசாரணை நடைபெற்றது. அரசு தரப்பில் சிறப்பு அரசு வக்கீல் என்.விஜயராஜ் ஆஜராகி வாதாடினார். குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் மூத்த வக்கீல்கள் பலர் ஆஜராகி வாதிட்டனர்.
அரசு தரப்பில் 57 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். 173 ஆவணங்கள், 42 சான்று பொருட்கள் தாக்கல் செய்யப்பட்டன. குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் 3 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். 7 ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன.
அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்தநிலையில், இந்த வழக்கில் வருகிற 2-ந் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி அல்லி நேற்று அறிவித்தார்.