நாங்குநேரி தொகுதியில் பரபரப்பு: காரில் கொண்டு வரப்பட்ட ரூ.1½ லட்சம் பறிமுதல் தேர்தல் பறக்கும் படை நடவடிக்கை

நாங்குநேரி தொகுதியில் காரில் கொண்டு வரப்பட்ட ரூ.1½ லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
நாங்குநேரி தொகுதியில் பரபரப்பு: காரில் கொண்டு வரப்பட்ட ரூ.1½ லட்சம் பறிமுதல் தேர்தல் பறக்கும் படை நடவடிக்கை
Published on

நாங்குநேரி,

நாங்குநேரி தொகுதியில் நேற்று இடைத்தேர்தல் நடந்தது. வாக்குப்பதிவு நடந்து கொண்டிருந்தபோது, வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுக்கப்படுகிறதா? என்பதை கண்காணிக்க தொகுதி முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் ஆங்காங்கே வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

நாங்குநேரி அருகே உள்ள பட்டப்பிள்ளைபுதூரில் பறக்கும் படை தாசில்தார் கலைமதி தலைமையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி பறக்கும் படையினர் சோதனை நடத்தினர்.

அப்போது காரில் ரூ.1 லட்சத்து 66 ஆயிரத்து 704 இருந்தது தெரியவந்தது. இதையடுத்து காரில் வந்தவரிடம் விசாரணை நடத்தியதில், அவர் சென்னையை சேர்ந்த சத்தியேந்திரன் (வயது 45) என்பது தெரிந்தது. அவர் பட்டாசு வாங்குவதற்காக அந்த பணத்துடன் வந்ததாக தெரிவித்தார். ஆனால், அதற்கு உரிய ஆவணங்கள் அவரிடம் இல்லை.

இதையடுத்து தேர்தல் பறக்கும் படையினர் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த பணம் அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. பணத்துக்கு உரிய ஆவணங்களை சமர்ப்பித்து திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையே, அந்த வழியாக வந்த அ.தி.மு.க.வினர், தி.மு.க. வினரின் காரையும் மறித்து சோதனை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினர். இதையடுத்து அங்கு வந்த முன்னாள் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் கிரகாம்பெல் காரிலும் சோதனை நடத்தப்பட்டது. ஆனால் காரில் பணம் எதுவும் சிக்கவில்லை.

பரப்பாடியில் உள்ள ஒரு ஓட்டலில் ஓட்டுக்கு பணம் கொடுக்கப்படுவதாக தகவல் பரவியது. இதனால் அங்கு திரண்ட காங்கிரஸ் மற்றும் அ.தி.மு.க.வினர் ஒருவர் மீது ஒருவர் புகார் கூறியதால் சலசலப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார், அவர்களை எச்சரித்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

இதேபோல் நேற்று முன்தினம் இரவு மருதகுளத்தில் ரூ.54 ஆயிரத்து 500-ம், பற்பநாதபுரத்தில் ரூ.41 ஆயிரத்து 500-ம் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

தேர்தலையொட்டி பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் பல்வேறு இடங்களில் பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com