மாவட்டத்தில் தொடர் மழை: 17 ஆயிரத்து 500 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின

புதுக்கோட்டை மாவட்டத்தில் பெய்த தொடர் மழை காரணமாக 17 ஆயிரத்து 500 ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின. இதையடுத்து, வேளாண் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
Published on

தொடர் மழை

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு காரணமாக தமிழகத்தில் ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று முன்தினம் பலத்த மழை பெய்தது. தொடர்ந்து நேற்று 2-வது நாளாக மழை பெய்தது. புதுக்கோட்டை நகரில் விட்டு, விட்டு மழை பெய்தது. சிறிது நேரம் மழை பெய்வதும், பின்னர் வெயில் அடிப்பதுமாக இருந்தது. ஆனால் மழை குறிப்பிட்ட அளவு ஒரே சீராக பெய்தது.

இந்த மழையின் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை சற்று பாதிப்படைந்தது. சாலையில் நடந்து சென்றவர்கள் சிலர் மழையில் நனைந்தபடியும், சிலர் மழையில் நனையாமல் இருக்க குடைகளை பிடித்தப்படியும் சென்றனர்.

நெற்பயிர்கள் மூழ்கின

இதேபோல் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. மாவட்டத்தில் சம்பா நெல் அறுவடை நடைபெற்று வருகிறது. மேலும் பல இடங்களில் அறுவடைக்கு தயாராக நெற்பயிர்கள் உள்ளன. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக தொடர் மழையின் காரணமாக நெல் அறுவடை பாதிப்படைந்துள்ளது. மேலும் நெற்பயிர்கள் சாய்ந்து மழைநீரில் மூழ்கின. இதில் மாவட்டத்தில் சுமார் 17 ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கியிருப்பதாக வேளாண்மை துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதில் மழை நீர் வடிந்தால் அவை காய்ந்து அறுவடைக்கு தயாராகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில் முழுமையாக மழை நீரில் மூழ்கிய நெற்பயிர்களை அறுவடை செய்ய முடியாத நிலை உள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கீரமங்கலம் சுற்றுவட்டார கிராமங்களில் நேற்று முன்தினம் காலை முதல் இரவு வரை தொடர் மழை பெய்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருந்தது. மேலும் சுபமுகூர்த்த தினங்கள் என்பதால் திருமணம் போன்ற விழாக்களிலும் ஏராளமானோர் கலந்து கொள்ளமுடியாத நிலை ஏற்பட்டிருந்தது. அதேபோல் நேற்று காலை முதல் மாலை வரை விட்டு விட்டு மழை பெய்தது.

தொடர்ந்து 2 நாட்களாக மழை பெய்ததால் கீரமங்கலம், கொடிக்கரம்பை, பனங்குளம், மேற்பனைக்காடு உள்பட பல்வேறு கிராமங்களிலும் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் மழையால் சாய்ந்து மழைநீரில் மூழ்கின. இதனால் அறுவடைக்கு முன்பே நெல்மணிகள் முளைத்து சேதமடையும் வாய்ப்புகள் உள்ளதால் விவசாயிகள் கவலையுடன் தெரிவித்தனர். கறம்பக்குடி பகுதியில் உள்ள செங்கமேடு, ரெகுநாதபுரம், மழையூர், திருமணஞ்சேரி, குளந்திரான்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தது.

சுற்றுச்சுவர் சேதம்

இந்த மழையினால் மின்சாரம் தாக்கி நேற்று முன்தினம் பெண் ஒருவர் இறந்தார். மணமேல்குடி அருகே தினையாகுடி வட்டம் பெட்டியா வயல் கிராமத்தை சேர்ந்த பாகம்பிரியாள் என்பவரது வீட்டின் சுற்றுச்சுவர் நேற்று இடிந்து விழுந்து சேதமடைந்தது குறிப்பிடத்தக்கது.

வேளாண் அதிகாரிகள் ஆய்வு

மாவட்டத்தில் அறந்தாங்கி, மணமேல்குடி, ஆவுடையார்கோவில் வட்டாரங்களில் நெற்பயிர்கள் மழைநீரில் அதிகம் மூழ்கி உள்ளன. இந்த பகுதிகளை வேளாண்மை துறை இயக்குனர் அண்ணாதுரை நேற்று ஆய்வு மேற்கொண்டார். புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை துறை இணை இயக்குனர் பெரியசாமி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர். நெற்பயிர்கள் சேதம் குறித்து கணக்கெடுத்த பின் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் கூறினர்.

இழப்பீடு வழங்க கோரிக்கை

இதுகுறித்து திருமயம் அருகே உள்ள புலிவலம் கிராமத்தை சேர்ந்த விவசாயி மோகன் கூறுகையில், தற்போது மாவட்டத்தில் சம்பா அறுவடை நடைபெற்று வருகிறது. சம்பா அறுவடை இன்னும் ஓரிரு வாரங்களில் முடியும் தருவாயில் உள்ள நிலையில் திடீரென பெய்த தொடர்மழை விவசாயிகளை நிலைகுலைய செய்துள்ளது. ஏற்கனவே கூலி உயர்வு, தொழிலாளர்கள் தட்டுப்பாடு காரணமாக கடன் வாங்கி விவசாயம் செய்துள்ள நிலையில் தற்போது மழையினால் சாய்ந்துள்ள நெற்பயிர்களை அறுவடை செய்ய கூடுதல் கூலி தேவைப்படும். மேலும் மழையில் நனைந்த நெல்லை குடோன்களில் விற்பனை செய்வது சவாலாக இருக்கும். மழை காரணமாக அறுவடை எந்திரம் வயலுக்குள் செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளதால் சாய்ந்து கிடக்கும் சம்பா பயிர்களை அறுவடை செய்வதற்கு கூடுதல் செலவு ஏற்படுவதுடன், பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

மழை அளவு

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி நேர நிலவரப்படி முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:- ஆதனக்கோட்டை-30, பெருங்களூர்-35.20, புதுக்கோட்டை-32, ஆலங்குடி-59, கந்தர்வகோட்டை-30, கறம்பக்குடி-46.20, மழையூர்-45.40, கீழணை- 58, திருமயம்-38.40, அரிமளம்-46.80, அறந்தாங்கி 54.90, ஆயிங்குடி-50.20, நாகுடி-55.40, மீமிசல்-47.40, ஆவுடையார்கோவில்-50, மணமேல்குடி-58, இலுப்பூர்-23, குடுமியான்மலை-28, அன்னவாசல்-20.10, விராலிமலை-21, உடையாளிப்பட்டி-19, கீரனூர்-23, பொன்னமராவதி-7, காரையூர்-17.80.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com