

காட்பாடி,
தி.மு.க. பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான துரைமுருகனின் வீடு காட்பாடி காந்திநகரில் உள்ளது.
இவரது மகன் கதிர் ஆனந்த் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிடுகிறார். தினமும் மகனுக்கு ஆதரவாக துரைமுருகன் பல்வேறு இடங்களுக்கு சென்று தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். அதன்படி நேற்று முன்தினம் இரவு 10.30 மணிக்கு பிரசாரம் முடிந்து அவர் வீட்டுக்கு வந்தார். அப்போது அங்கு வருமான வரித்துறை ஆய்வாளர்களான மனோஜ், முரளிதரன், சதீஷ் ஆகியோர் வந்தனர்.
அவர்கள் வீட்டை சோதனை செய்ய வந்ததாக தெரிவித்தனர். அப்போது தி.மு.க.வைச் சேர்ந்த வக்கீல்கள், இந்த வீடு வேலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளரின் வீடு. நீங்கள் அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் பணிகளை மேற்கொள்பவர்கள். வீட்டினுள் நுழைந்து சோதனை செய்ய உங்களுக்கு அதிகாரம் இல்லை என்றனர்.
அந்த சமயத்தில் அங்கு வருமான வரித்துறை உதவி ஆணையர் விஜய்தீபன் வந்தார். அவர், தனது தலைமையிலான குழுவினர்தான் சோதனை செய்ய வந்ததாக தெரிவித்தார். அப்போது அவருடன், தி.மு.க. வக்கீல்களும், தொண்டர்களும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உரிய அனுமதி இன்றி சோதனை நடத்தக்கூடாது என்று அவர் கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நீண்டநேர போராட்டத்துக்கு பின்னர் அதிகாலை 3 மணி அளவில் விஜய்தீபன் தலைமையிலான குழுவினர் துரைமுருகன் வீட்டிற்குள் சென்று சோதனை போட்டனர். இந்த சோதனை விடிய, விடிய நடந்தது. 5.45 மணி அளவில் மேலும் 3 அதிகாரிகள் கொண்ட மற்றொரு குழு அங்கு வந்து அவர்களுடன் சேர்ந்து ஆய்வு செய்தனர். தொடர்ந்து 6 மணி நேரம் நடைபெற்ற சோதனை மற்றும் விசாரணைக்கு பின்னர் காலை 9 மணிக்கு 4 அதிகாரிகள் வெளியே வந்தனர்.
இதையடுத்து 10.15 மணிக்கு 3 அதிகாரிகள் வெளியே வந்தனர். அவர்கள் வரும் போது கையில் ஒரு கைப்பை வைத்திருந்தனர். அதில் பணம் இருந்ததா?, அல்லது ஆவணங்கள் இருந்ததா? என்பது குறித்து அவர்கள் எதுவும் தெரிவிக்கவில்லை.
துரைமுருகன் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவரது காரையும் அதிகாரிகள் சோதனை செய்தனர்.
துரைமுருகனின் மகனுக்கு சொந்தமான கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரி காட்பாடி கிறிஸ்டியான்பேட்டையில் உள்ளது. இந்த கல்லூரியிலும் சோதனை நடத்தப்பட்டது. இதற்காக போலீஸ் பாதுகாப்புடன் 5 வாகனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு வந்தனர். அவர்கள் வந்த வாகனங்களில் தேர்தல் பணி குறித்த ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருந்தது.
இதைப்பார்த்த அங்கிருந்த காவலாளிகள், கல்லூரியில் பெண்கள் விடுதி உள்ளதால் இரவில் சோதனை நடத்த அனுமதிக்க முடியாது என்றனர். இதனால் 8 மணி நேரம் காத்திருந்த அதிகாரிகள் காலை 6.15 மணி அளவில் கல்லூரிக்குள் சென்று சோதனை போட்டனர்.
இந்த சோதனை குறித்து தகவல் அறிந்ததும் பத்திரிகையாளர்களும் அங்கு விரைந்தனர். அசம்பாவிதம் எதுவும் ஏற்படாமல் இருக்க காட்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர் தலைமையில் ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.
கல்லூரிக்கு வந்த மாணவர்களுக்கு எந்தவித கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை. அவர்கள் வழக்கமான அன்றாட நடைமுறைகளை மேற்கொண்டனர்.
கல்லூரியில் நடந்த சோதனை இரவு 8 மணி வரை நீடித்தது.
அவரது பள்ளிக்கூடத்திலும் சோதனை நடத்தப்பட்டது.
துரைமுருகன் குடும்பத்தினருக்கு மிகவும் நெருக்கமானவர் என கூறப்படும் கே.சக்கரவர்த்தி குடியாத்தம் அருகே உள்ள அணங்காநல்லூர் மோட்டூர் பகுதியில் வசிக்கிறார். தி.மு.க. முன்னாள் பொதுக்குழு உறுப்பினரான இவர் வேலூர் மத்திய கூட்டுறவு வங்கி துணைத் தலைவராகவும், குடியாத்தம் ஒன்றியக் குழு துணைத் தலைவராகவும் இருந்தவர். தற்போது ரியல் எஸ்டேட், கட்டுமான தொழில், பொதுப்பணித்துறை ஒப்பந்த பணிகள் செய்து வருகிறார்.
சக்கரவர்த்தியின் வீட்டுக்கு நேற்று அதிகாலை 5 மணிக்கு வந்த வருமான வரி அதிகாரிகள் 8 பேர் மாலை 4.30 மணி வரை சோதனை நடத்தினார்கள். சோதனை முடிந்ததும் சில ஆவணங்களை அவர்கள் அங்கிருந்து எடுத்து சென்றதாக கூறப்படுகிறது.
இதேபோல் வாணியம் பாடியை அடுத்த செக்குமேடு கிராமத்தைச் சேர்ந்த தி.மு.க. முன்னாள் மாவட்ட செயலாளரான தேவராஜ் என்பவரின் வீட்டுக்கு, சென்னை வருமான வரித்துறை அதிகாரி நாராயணன் சவுடா தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினர் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி அளவில் சென்று சோதனை நடத்தினார்கள்.
அங்கு வீட்டில் இருந்த தேவராஜின் மனைவியிடம் வருமானவரித்துறை அதிகாரிகள் தகவலை தெரிவித்து, சோதனையை உடனடியாக மேற்கொண்டனர். நள்ளிரவு 2 மணி வரை நடந்த இந்த சோதனையில் ஆவணங்கள் எதுவும் கைப்பற்றவில்லை என்று தெரிகிறது.
வருமான வரி அதிகாரிகள் நடத்திய இந்த சோதனைக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரதமர் மோடியே நேரடியாக தலையிட்டு வருமான வரித்துறை சோதனை நடத்த உத்தரவிட்டு இருப்பது அதிகார துஷ்பிரயோகம் என்றும், இதுபோன்ற சோதனை பயமுறுத்தல்களுக்கு தி.மு.க. அஞ்சாது என்றும் கூறி உள்ளார்.