சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம் - குடிநீர் வாரியம் தகவல்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம் - குடிநீர் வாரியம் தகவல்
Published on

சென்னை,

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை பணிகள் குறித்த தகவல்களை சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

"சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில் வடகிழக்கு பருவமழை முன்னிட்டு முன்னெச்சரிக்கைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 2,000 களப்பணியாளர்கள் களப்பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். குடிநீரின் தரத்தை உறுதிசெய்ய ஆய்வகம் மூலம் நாளொன்றுக்கு 300 குடிநீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு குடிநீரின் தரம் பரிசோதிக்கப்படுகிறது.

சென்னை குடிநீர் வாரியமும் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சியும் இணைந்து ஒவ்வொரு மாதமும் 200 இடங்களில் குடிநீரின் மாதிரிகள் எடுக்கப்பட்டு தரம் பரிசோதிக்கப்படுகிறது. குடிநீர் விநியோக அமைப்பில் தேவைக்கேற்ப ஆங்காங்கே உடனடியாக குளோரின் சேர்ப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மழைக்காலங்களில் குடிநீர் விநியோக நிலையங்களில் தேங்கும் மழைநீரினை இறைக்க 16 பெரிய நீர் உறிஞ்சும் இயந்திரங்கள் மற்றும் 92 சிறிய நீர் உறிஞ்சும் இயந்திரங்கள் குடிநீர் விநியோக நிலையங்களில் தயார் நிலையில் வைக்கப்பட்டடுள்ளது. அனைத்து குடிநீர் சுத்திகரிப்பு மற்றும் விநியோக நிலையங்களிலும், உள்ள இயந்திரங்கள் மற்றும் ஜெனரேட்டர்கள் நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு இயங்கி வருகின்றன.

கழிவுநீர் அடைப்பு ஏற்படும் 502 இடங்கள் கண்டறியப்பட்டு, 282 தூர்வாரும் இயந்திரங்கள், 125 ஜெட்ராடிங் இயந்திரங்கள், 4 சிறிய ஜெட்ராடிங் இயந்திரங்கள், 32 ஜெட்டிங் மற்றும் உறிஞ்சும் இயந்திரங்கள் மற்றும் 57 கழிவுநீர் உறிஞ்சும் இயந்திரங்கள் ஆக மொத்தம் 500 கழிவுநீர் இயந்திரங்கள் மூலம் தூர்வாரப்பட்டு, தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன. மேலும், கழிவுநீர் அடைப்பு, கழிவுநீர் தேக்கம், மழைநீர் அகற்றும் பணிகளை சீர் செய்யும் வகையில் 2000 களப்பணியாளர்கள் 24 மணி நேரமும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சென்னை குடிநீர் வாரிய தலைமை அலுவலகத்தில் புகார் பிரிவு 24 மணிநேரமும் செயல் பட்டு வருகிறது பொதுமக்கள் தங்களுடைய குடிநீர் மற்றும் கழிவுநீர் புகார்களை கீழ்கண்ட தொலைபேசி எண்களில் 044-45674567 (20 இணைப்புகள்) மற்றும் கட்டணமில்லா எண் 1916 தொடர்பு கொண்டு தங்களுடைய குறைகளை தெரிவித்து நிவர்த்தி பெற்றுக் கொள்ளலாம்."

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com