அரசு பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்கள் அனுப்பும் பணி தீவிரம்

வருகிற 13-ந் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் அரசு பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்கள் அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அரசு பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்கள் அனுப்பும் பணி தீவிரம்
Published on

பனமரத்துப்பட்டி:

பாடப்புத்தகங்கள்

தமிழகம் முழுவதும் வருகிற 13-ந் தேதி பள்ளிக்கூடங்கள் திறக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்களை பள்ளிகள் திறக்கப்படும் நாளிலேயே வழங்கப்பட உள்ளது.

இதற்காக புத்தகங்களை பள்ளிகளுக்கு அனுப்பும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. சேலம் மாவட்டத்தில் சேலம் மாநகர், புறநகர், சங்ககிரி, ஆத்தூர், எடப்பாடி என 5 கல்வி மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு உள்ள நிலையில் அந்தந்த கல்வி மாவட்டங்களில் உள்ள குறிப்பிட்ட பள்ளிகளில் புத்தகங்கள் கடந்த வாரம் கொண்டுவந்து இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

தொடக்கப்பள்ளிகள்

இந்த நிலையில் அந்த புத்தகங்களை பள்ளிகளுக்கு அனுப்பும் பணி நேற்று முதல் தொடங்கியது. முதல் நாளான நேற்று 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அந்தந்த ஒன்றியங்களில் உள்ள வட்டார கல்வி மையத்திற்கு புத்தகங்கள் கொண்டு செல்லப்பட்டன. அங்கிருந்து ஒவ்வொரு ஒன்றிய தொடக்கப்பள்ளிகளுக்கு புத்தகங்கள் வழங்கப்பட உள்ளது. அதேபோல் இன்று (புதன்கிழமை) 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு வழங்குவதற்காக விலையில்லா புத்தகங்களை அந்தந்த பள்ளிகளுக்கு நேரடியாக கொண்டு செல்லப்பட உள்ளது.

சேலம் மாநகர் கல்வி மாவட்டத்திற்கு அயோத்தியாப்பட்டணம் அரசு பள்ளியில் இருந்தும், புறநகர் கல்வி மாவட்டத்திற்கு மல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் இருந்தும், எடப்பாடி பள்ளி மாவட்டத்திற்கு ஜலகண்டாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் இருந்தும், சங்ககிரி கல்வி மாவட்டத்திற்கு ஓமலூர் காமாண்டம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் இருந்தும், ஆத்தூர் மாவட்டத்துக்கு ஆத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் இருந்தும் புத்தகங்கள் வினியோகிக்கப்பட்டு வருகின்றன.

அரசு உத்தரவு

இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறும் போது, பள்ளிகள் திறக்கப்படும் நாளிலேயே மாணவர்கள் அனைவருக்கும் விலையில்லா பாடப்புத்தகங்களை வழங்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. வருகிற 13-ந் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் அதற்கு முன்னதாகவே அனைத்து பள்ளிகளுக்கும் விலையில்லா பாடப்புத்தகங்களை கொண்டு சேர்த்துவிட வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. அதற்கான பணிகள் தொடங்கப்பட்டு தீவிரமாக நடைபெற்று வருகிறது. வருகிற 10-ந் தேதிக்குள் அனைத்து அரசு பள்ளிகளுக்கும் பாடப்புத்தகங்கள் அனுப்பப்பட்டுவிடும் என்று தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com