ஜெயலலிதாவின் கார் டிரைவர் பலி; குற்றம்சாட்டப்பட்ட மற்றொருவர் படுகாயம்

நீலகிரி மாவட்டம் கோடநாட்டில் உள்ள மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் எஸ்டேட்டில் காவலாளியாக வேலைபார்த்த ஓம்பகதூர் கடந்த 24–ந் தேதி மர்ம கும்பலால் கொலை செய்யப்பட்டார்.
ஜெயலலிதாவின் கார் டிரைவர் பலி; குற்றம்சாட்டப்பட்ட மற்றொருவர் படுகாயம்
Published on

கோவை,

கிருஷ்ணபகதூர் என்ற மற்றொரு காவலாளி படுகாயத்துடன் உயிர் தப்பினார். அந்த கும்பல் அங்கிருந்து பணம் மற்றும் முக்கிய ஆவணங்களை எடுத்துச்சென்றதாக கூறப்படுகிறது.

போலீசார் 7 தனிப்படைகள் அமைத்து கொலைக்கான காரணம் குறித்தும், கொலையாளிகள் பற்றியும் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள். கொலையாளிகளை நேரில் பார்த்த ஒரே சாட்சியான கிருஷ்ணபகதூரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், கொலையாளிகள் 3 கார்களில் வந்தது தெரியவந்தது. எஸ்டேட்டில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் செயல்படாததால், எஸ்டேட்டை சுற்றி ஏதாவது ஆவணங்கள் சிக்குகிறதா? என்று போலீசார் தேடுதல் வேட்டை நடத்தினார்கள்.

அப்போது எஸ்டேட் பகுதியில் 2 கார்களுக்கான போலி நம்பர் பிளேட், ஒரு கையுறை சிக்கியது. எனவே, காவலாளியை கொலை செய்து விட்டு ஆவணங்களை எடுத்து சென்ற கொலையாளிகள் அவற்றை வீசி சென்றது உறுதி செய்யப்பட்டது. மேலும் கொலை நடந்த 24ந் தேதி மற்றும் அதற்கு முந்தைய நாளில் கோடநாடு எஸ்டேட் பகுதிக்கு வந்து சென்ற வாகனங்கள் மற்றும் அவற்றின் பதிவு எண் குறித்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அப்போது சந்தேகத்திற்கிடமாக சில கார்கள் வந்து சென்றது கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த வீடியோ பதிவை உயிர்தப்பிய கிருஷ்ணபகதூரிடம் போலீசார் காட்டி விசாரித்த போது, பஜூரோ, இன்னோவா, சாண்ட்ரோ ஆகிய 3 கார்களில் கொலையாளிகள் வந்ததாக அவர் தெரிவித்தார்.

விசாரணையில் கேரளாவைச் சேர்ந்த கூலிப்படையினர் கொலையை செய்தது உறுதி செய்யப்பட்டது. கிருஷ்ணபகதூர் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் கம்ப்யூட்டர் உதவியுடன் கொலையாளியின் உருவப்படத்தை வரைந்து வெளியிட்டனர். மேலும் கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கு கொலையாளிகளை தேடி தனிப்படை போலீசார் விரைந்தனர்.

இதைத்தொடர்ந்து கேரளாவில் திருச்சூரை சேர்ந்த சந்தோஷ் சாமி (வயது 39), சதீசன் (42), திபு (32) ஆகிய 3 பேரை மடக்கிப்பிடித்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் அதே திருச்சூரை சேர்ந்த உதயகுமார் (47) என்பவரை போலீசார் நேற்று முன்தினம் பிடித்தனர். அவர்கள் 4 பேரையும் போலீசார் ஊட்டிக்கு கொண்டு வந்தனர். அங்கு ரகசிய இடத்தில் 4 பேரிடமும் விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் காவலாளி கொலை சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டவர், மறைந்த முதல்அமைச்சர் ஜெயலலிதாவிடம் முன்பு கார் டிரைவராக இருந்த கனகராஜ் (36) என தெரியவந்தது. இவர் சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள சித்திரப்பாளையத்தைச் சேர்ந்தவர்.

எஸ்டேட் காவலாளி கொலை வழக்கில் இவரையும், இவரது நண்பர் சயன் என்பவரையும் தனிப்படை போலீசார் தேடி வந்த நிலையில், அடுத்தடுத்த திருப்பங்கள் ஏற்பட்டு உள்ளன.

அதுபற்றிய விவரம் வருமாறு:

கனகராஜ் கடந்த 2009ம் ஆண்டு முதல் சென்னையில் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டில் கார் டிரைவராக பணியாற்றி வந்தார். ஜெயலலிதாவின் பெயரை பயன்படுத்தி பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதால் 2012ம் ஆண்டு அவரை பணியில் இருந்து நீக்கிவிட்டனர். பின்னர் சொந்த ஊருக்கு வந்த கனகராஜ், ஒரு கார் வாங்கி அதை ஓட்டி வந்தார். மேலும் கோடநாடு எஸ்டேட்டில் தினக்கூலி அடிப்படையில் அவ்வப்போது கார் டிரைவர் பணிக்கு சென்று வந்ததும் தெரியவந்தது.

ஜெயலலிதா மறைவுக்கு பின், கோடநாட்டில் உள்ள ஜெயலலிதாவின் சொத்துகளை கொள்ளையடிக்க கனகராஜ் திட்டம் தீட்டினார். மேலும் கோடநாடு பங்களாவில் ரூ.200 கோடி இருப்பதாகவும், தங்க கட்டிகள் இருப்பதாகவும் கனகராஜ் கருதினார். இந்த பணத்தையும், தங்க கட்டிகளையும் கொள்ளையடிக்க வேண்டும் என்பதில் அவர் தீவிர கவனம் செலுத்தினார்.

இந்த திட்டத்திற்கு அவரது நண்பர் கோவையைச் சேர்ந்த சயன் (36) உதவி உள்ளார். கோவை ராமநாதபுரத்தில் பேக்கரி ஒன்றில் வேலைபார்த்த சயன் கேரள மாநிலம் திருச்சூர் பகுதியைச் சேர்ந்தவர். கனகராஜ் வகுத்த திட்டத்தின்படி, சயன் கேரளாவில் உள்ள கூலிப்படையை திரட்ட மனோஜ் என்ற சாமியாரை நாடினார். சாமியார் மனோஜின் ஏற்பாட்டின் பேரில், ஹவாலா பண மோசடி கும்பலைச் சேர்ந்த கூலிப்படையை அமைத்து கொலை, கொள்ளையை அரங்கேற்றியதாக கூறப்படுகிறது.

முக்கிய குற்றவாளியான கனகராஜை பிடிக்க போலீசார் திட்டமிட்ட போது, அவர் சென்னையில் இருந்து சொந்த ஊரான எடப்பாடி அருகே உள்ள சித்திரப்பாளையம் பகுதிக்கு சென்றது தெரியவந்தது. இந்த நிலையில் போலீசார் தன்னை தேடுவதை அறிந்த கனகராஜ், ஆத்தூர் 2வது வார்டு சக்திநகரில் உள்ள சித்தி சரஸ்வதி வீட்டுக்கு காரில் சென்று பதுங்கினார்.

அங்கு நேற்று முன்தினம் இரவு நண்பர் ரமேஷ் என்பவரின் மோட்டார் சைக்கிளை வாங்கிக் கொண்டு, ஆத்தூர் நகருக்கு மது குடிக்க சென்றார். சித்தி சரஸ்வதியின் மகள் ரோஜா, மருமகள் சித்ரா ஆகியோருக்கு குழந்தை பிறந்துள்ளதால், அவர்களுக்கு தேவையான பொருட்களையும் வாங்கிக்கொண்டு மீண்டும் கனகராஜ் சக்திநகர் திரும்பினார்.

ஆத்தூர் புறவழிச்சாலையில் சந்தனகிரி பிரிவு ரோட்டில் மோட்டார் சைக்கிள் வந்தபோது, அந்த வழியாக வந்த சொகுசுகார் மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய கனகராஜை, ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால், வரும் வழியிலேயே அவர் உயிர் இழந்தார்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு ஆத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பொன்கார்த்திக்குமார், இன்ஸ்பெக்டர் பாஸ்கர்பாபு மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

கோடநாடு எஸ்டேட் காவலாளி கொலையில், போலீசாரால் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியாக கருதப்படும் கனகராஜ் விபத்தில் இறந்து விட்டார் என்றதும், இந்த விபத்து திட்டமிட்ட சதியா? என்றும், காரை மோதவிட்டு கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்த தொடங்கினர்.

விபத்து ஏற்படுத்திய காரில் வந்தவர்கள் குறித்து விசாரித்தபோது, பெங்களூரு ஹாசராப்பள்ளி என்ற இடத்தில் சாப்ட்வேர் என்ஜினீயர் மல்லிகா என்பவர் தனது குடும்பத்துடன் சொந்த ஊரான பெரம்பலூருக்கு வந்ததும், அப்போது விபத்து நேர்ந்ததும் தெரியவந்தது. மேலும் காரை ஓட்டிவந்த டிரைவர் சேலம் மாவட்டம் தம்மம்பட்டியை சேர்ந்த ரபீக் (28) என்பவரை போலீசார் பிடித்து விசாரித்து வருகிறார்கள்.

மேலும் கனகராஜ் சாவில் மர்மம் இருப்பதால் ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் இருக்கும் அவரது உடல் பிரேத பரிசோதனையை வீடியோ பதிவு செய்ய சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜன் உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து நேற்று மாலை 4 மணிக்கு பிரேத பரிசோதனை நடந்தது.

கனகராஜ் விபத்தில் சிக்கி பலியானது பற்றி அவரது சகோதரர் தனபால் சந்தேகம் கிளப்பி இருக்கிறார். சம்பவம் நடந்ததாக கூறப்படும் இடத்துக்கு தான் நேரில் சென்று பார்த்ததாகவும், அங்கு விபத்து நடந்ததற்கான அறிகுறியே தெரியவில்லை என்றும், கனகராஜ் திட்டமிட்டு சாகடிக்கப்பட்டது போல் தெரிவதாகவும் அவர் கூறினார்.

விபத்தில் பலியான கனகராஜிக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. அவருக்கு கலைவாணி என்ற மனைவியும், 1 வயதில் மகதி என்ற பெண் குழந்தையும் உள்ளது.

இதற்கிடையே கனகராஜின் கூட்டாளியான சயனையும் போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், அவர் மற்றொரு விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து உள்ளார்.

தன்னை போலீசார் தேடுவதை அறிந்த சயன், மனைவி வினுப்பிரியா (31), மகள் நீது (6) ஆகியோருடன் தனது சொந்த ஊரான கேரள மாநிலம், திருச்சூர் அருகே உள்ள இரிஞ்சாலகுடா என்ற இடத்துக்கு காரில் தப்பிச்சென்றார்.

நேற்று அதிகாலை 3 மணி அளவில் பாலக்காடு மாவட்டம் கண்ணடி என்ற பகுதியில் கார் சென்று கொண்டு இருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. அப்போது சாலையில் நின்று கொண்டிருந்த கன்டெய்னர் லாரி மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் காரில் இருந்த சயன், வினுப்பிரியா, நீத்து ஆகிய 3 பேரும் பலத்த காயம் அடைந்தனர். போக்குவரத்து போலீசார் 3 பேரையும் மீட்டு பாலக்காடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். போகும் வழியில் வினுப்பிரியாவும், நீத்துவும் பரிதாபமாக இறந்தனர்.

பின்னர் சயனை அங்கிருந்து கோவை கொண்டு வந்து தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று மதியம் கோவை 5வது கோர்ட்டு மாஜிஸ்திரேட்டு செல்வகுமார் மருத்துவமனைக்கு வந்து, சிகிச்சை பெற்று வரும் சயனிடம் வாக்குமூலம் பெற்றார். விபத்து குறித்தும், கோடநாடு கொலை குறித்தும் வாக்குமூலம் பெற்றதாக கூறப்படுகிறது.

சயன் பயணம் செய்த கார், கோடநாடு எஸ்டேட்டுக்கு கொலையாளிகள் சென்ற கார் என விசாரணையில் தெரியவந்து உள்ளது.

ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ் விபத்தில் இறந்ததும், அவருடைய கூட்டாளி சயன் விபத்தில் படுகாயம் அடைந்ததும் இந்த கொலை வழக்கில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடையே, கோடநாடு எஸ்டேட்டில் காவலாளி கொலை செய்யப்பட்டது குறித்தும், அதைத் தொடர்ந்து நடைபெற்று வரும் சம்பவங்கள் குறித்தும் நீதி விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், பாரதீய ஜனதா மூத்த தலைவர் இல.கணேசன் ஆகியோர் வற்புறுத்தி உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com