கச்சத்தீவு திருவிழா இன்று துவக்கம் - ராமேசுவரத்தில் இருந்து 72 படகுகளில் 2400 பேர் பயணம்..!

கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
கச்சத்தீவு திருவிழா இன்று துவக்கம் - ராமேசுவரத்தில் இருந்து 72 படகுகளில் 2400 பேர் பயணம்..!
Published on

ராமேசுவரம்,

இந்தியாவிற்கும்-இலங்கைக்கும் இடையே நடுக்கடல் பகுதியில் ராமேசுவரத்திற்கு அருகில் உள்ளது கச்சத்தீவு. அங்கு உள்ள புனித அந்தோணியார் ஆலய திருவிழா ஆண்டுதோறும் பிப்ரவரி மாத இறுதியிலோ அல்லது மார்ச் மாதத்தின் முதல் வாரத்திலோ நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா இன்று(வெள்ளிக்கிழமை) தொடங்கி 2 நாட்கள் நடைபெறுகிறது.

திருவிழாவின் முதல் நாளான இன்று மாலை 4.30 மணிக்கு ஆலயத்தின் முன் பகுதியில் உள்ள அந்தோணியாரின் உருவம் பதித்த கொடியை நெடுந்தீவு பங்குதந்தை எமலி பால் ஏற்றி வைக்கிறார். தொடர்ந்து ஆலயத்தை சுற்றி 14 இடங்களில் சிலுவை பாதை திருப்பலி நடைபெற்று முதல் நாள் திருவிழா திருப்பலி பூஜை நடைபெறுகிறது. பின்னர் இரவு 8 மணிக்கு அந்தோணியாரின் தேர்பவனி நிகழ்ச்சி நடக்கிறது. தேர் பவனி நிகழ்ச்சிக்கு பின்னர் முதல் நாள் திருவிழா நிறைவு பெறுகின்றது.

2-வது நாளான நாளை(சனிக்கிழமை) காலை 7 மணிக்கு யாழ்ப்பாணம் மறை மாவட்ட ஆயர் ஜஸ்டன் ஞானபிரகாசம் தலைமையில் 2-ம் நாள் திருவிழா திருப்பலி பூஜை நடைபெறுகிறது. 9 மணி வரை நடைபெறும் இந்த திருவிழா திருப்பலி பூஜைக்கு பின்னர் கொடி இறக்கம் நடைபெற்று திருவிழா நிறைவு பெறுகின்றது.

கச்சத்தீவு திருவிழாவில் கலந்து கொள்வதற்காக ராமேசுவரம் துறைமுக பகுதியில் இருந்து 60 விசைப்படகு மற்றும் 12 நாட்டுப்படகுகளில் 2,408 பக்தர்கள் பயணம் செய்ய உள்ளனர். போலீசார் மற்றும் சுங்கத்துறை பிரிவு கடலோர போலீசாரின் தீவிர சோதனைக்கு பின்னர் ஒவ்வொரு படகாக வரிசை எண் அடிப்படையில் கச்சத்தீவை நோக்கி புறப்பட்டு செல்கிறது.

இந்த திருவிழாவை முன்னிட்டு அங்கு இலங்கை அரசு ஏற்பாட்டில் இலங்கை கடற்படை மற்றும் ராணுவத்தினர் இணைந்து தீவில் இருநாட்டு பக்தர்கள் தங்குவதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதுபோல் கச்சத்தீவை சுற்றி ஏராளமான ரோந்து கப்பல்களையும் பாதுகாப்பிற்காக இலங்கை கடற்படை நிறுத்தி வைத்துள்ளது.

இதற்கிடையே கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு ராமேசுவரம் பகுதியில் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வருகிற 5-ந் தேதிவரை தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏராளமான மீன்பிடி படகுகள் கடலுக்கு செல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com