

சென்னை,
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனுக்கு, சில வருடங்களுக்கு முன் ஏற்பட்ட விபத்தின் காரணமாக அவரது காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பிறகு திரைப்படங்கள் மற்றும் கட்சிப் பணிகளில் அவர் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார்.
இந்த நிலையில் மீண்டும் தனது காலில் ஒரு சிறு அறுவை சிகிச்சை செய்ய வேண்டி உள்ளதால் சில நாட்கள் ஓய்வு தேவைப்படுகிறது என்று கமல்ஹாசன் தெரிவித்திருந்தார். இது தொடர்பான அறிக்கை ஒன்றை வெளியிட்ட அவர், சில நாட்கள் ஓய்வுக்குப் பின் மீண்டும் என் பணிகளைப் புதிய விசையுடன் தொடர்வேன். மக்களை நேரில் சந்திக்க இயலாது என்றாலும் வீடியோ வழியாக பேசுவேன் என்று தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து இன்று கமல்ஹாசனுக்கு காலில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்ததாக அவரது மகள்கள் ஸ்ருதி மற்றும் அக்ஷரா இருவரும் தெரிவித்துள்ளனர். இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று காலை ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனையில் எங்கள் அப்பாவுக்கு காலில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்தது. அப்பா நலமுடன் உற்சாகமாக இருக்கிறார். அனைவரது அன்புக்கும், பிரார்த்தனைகளுக்கும் எங்களது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளனர்.
இன்னும் 4 அல்லது 5 நாட்களுக்கு பிறகு கமல்ஹாசன் வீடு திரும்புவார் என்றும் சில நாட்கள் ஓய்வுக்குப் பின் மீண்டும் மக்களை சந்திப்பார் என்றும் கமல்ஹாசன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.