காஞ்சீபுரம் குமரகோட்டம் முருகன் கோவில் பிரம்மோற்சவ விழா - கொடியேற்றத்துடன் தொடங்கியது

காஞ்சீபுரம் குமரகோட்டம் முருகன் கோவில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
காஞ்சீபுரம் குமரகோட்டம் முருகன் கோவில் பிரம்மோற்சவ விழா - கொடியேற்றத்துடன் தொடங்கியது
Published on

கோவில் நகரமான காஞ்சீபுரத்தில் புகழ்பெற்ற கந்தபுராணம் அரங்கேறிய திருத்தலமான குமரகோட்டம் முருகன் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாத பிரம்மோற்சவ விழா வெகு விமரிசையாக நடைபெறும்.

ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக தமிழகத்தில் கொரோனா தொற்று கட்டுபாட்டு வழிமுறைகள் அமலில் இருந்த நிலையில் இந்த பிரம்மோற்சவ விழா நடைபெறாமல் இருந்து வந்தது.

இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான வைகாசி விசாக பிரம்மோற்சவ விழா நேற்று அதிகாலை அர்ச்சகர்களின் வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவையொட்டி அதிகாலை மூலவருக்கும், உற்சவர் முருகன், வள்ளி, தெய்வானைக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பிறகு வண்ண மலர்களால் சாமி அலங்கரிக்கப்பட்டு தூப, தீப ஆராதனைகள் காண்பிக்கப்பட்டது.

விழாவின் முதல் நாளான நேற்று பவளக்கால் சப்பரத்தில்சாமி எழுந்தருளி நான்கு ராஜவீதிகள் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வுகளாக நாளை (ஞாயிற்றுக்கிழமை) தேவேந்திர மயில் வாகனமும், 9-ந்தேதி தேரோட்டம், 13-ந்தேதி வள்ளி திருக்கல்யாணமும் நடைபெற்று 16-ந்தேதி விடையாற்றி திருவிழாவுடன் விழா நிறைவு பெறுகிறது.

விழா ஏற்பாடுகளை காஞ்சீபுரம் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் வான்மதி, கோவில் செயல் அலுவலர் தியாகராஜன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com