கரூர் கூட்ட நெரிசல்: விசாரணையின் அடிப்படையில் கைது நடவடிக்கை - சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி தகவல்

ஆணைய அறிக்கைக்கு பிறகே அடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் தெரிவித்துள்ளார்.
கரூர் கூட்ட நெரிசல்: விசாரணையின் அடிப்படையில் கைது நடவடிக்கை - சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி தகவல்
Published on

கரூர்,

த.வெ.க. தலைவரும், நடிகருமான விஜய், கரூர் வேலுச்சாமிபுரத்தில் நேற்று பகல் 12 மணியளவில் பிரசாரம் செய்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் அவரை காண நேற்று காலை முதலே அந்த கட்சியின் தொண்டர்கள் ஏராளமானவர்கள் திரண்டிருந்தனர். இதனையடுத்து நடந்த கூட்டநெரிசலின் காரணமாக ஏராளமானவர்கள் மயங்கி விழுந்தனர். இதில் பெரும்பாலானவர்கள் சுமார் 6 வயது முதல் 12 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள், சிறுமிகள் ஆவார்கள்.

இதையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர் மேல்சிகிச்சைக்காக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சூழலில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 39 பேர் உயிரிழந்தனர். இதில் 10 பேர் குழந்தைகள், 17 பேர் பெண்கள், 12 பேர் ஆண்கள் ஆவர்.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக கரூர் மருத்துவமனையில் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

கரூர் தவெக கூட்டத்திற்கு தேவையான பாதுகாப்பு தரப்பட்டது. வழக்குப்பதிவு செய்யப்பட்டு கூட்ட நெரிசல் தொடர்பாக விசாரணை நடைபெறுகிறது. கரூர் கூட்ட நெரிசல் குறித்து விசாரணையின் அடிப்படையில் மேல் நடவடிக்கைகள் எடுக்கப்படும். ஆணைய அறிக்கைக்கு பிறகே அடுத்த நடவடிக்கை எடுக்கப்படும். கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்து சிகிச்சையில் உள்ளவர்கள் அனைவரும் நலமாக உள்ளனர்

இவ்வாறு அவர் கூறினார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com