

சென்னை,
கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் நோயாளியை சக்கர நாற்காலியில் இருந்து தள்ளிய விவகாரத்தில் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்த மனித உரிமை ஆணையம் தமிழக ஊரக சுகாதாரம் மற்றும் மருத்துவ பணிகள் இயக்குனர் 3 வாரங்களில் அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளது.
வழக்கின் விவரம்:-
கிருஷ்ணகிரியில் மாவட்ட அரசு தலைமை ஆஸ்பத்திரி உள்ளது. இங்கு கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர்களும், பக்கத்து மாவட்டமான திருப்பத்தூரில் இருந்தும் ஏராளமான நோயாளிகள் தினமும் பல்வேறு சிகிச்சைக்காக வருகிறார்கள். இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரியில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று வாட்ஸ்-அப் குழுக்களில் வெளியாகி நோயாளிகளையும், பொதுமக்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
அதன்படி கிருஷ்ணகிரி மாவட்ட அரசு தலைமை ஆஸ்பத்திரியில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வரும் ஒரு நபரை, மருத்துவமனை ஊழியர் ஒருவர் சக்கர நாற்காலியில் அழைத்து வந்து, கட்டிலின் அருகே நிறுத்துகிறார். பிறகு சக்கர நாற்காலியில் இருந்து எழுந்து கட்டிலுக்கு செல்லுமாறு நோயாளியிடம் அந்த ஊழியர் கூறுகிறார். ஆனால் அந்த நோயாளியால் எழுந்து செல்ல முடியவில்லை.
இதனால் அந்த நோயாளி ஊழியரிடம் உதவி செய்யுமாறு கேட்கிறார். அப்போது அந்த ஊழியர் அவரை திட்டி சக்கர நாற்காலியில் இருந்து கீழே தள்ளி விட்டவாறு அங்கிருந்து செல்கிறார். இதை அந்த பகுதியில் இருந்த யாரோ ஒருவர் செல்போனில் வீடியோவாக எடுத்து வாட்ஸ்-அப் குழுக்களில் பகிர்ந்துள்ளனர். இந்த வீடியோ தற்போது கிருஷ்ணகிரி மாவட்ட வாட்ஸ்-அப் குழுக்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் பிரபாகர் கூறுகையில்,, நோயாளியிடம் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட மருத்துவமனை ஊழியர் பாஸ்கரன் தற்காலிக பணிநீக்கம் (சஸ்பெண்டு) செய்யப்பட்டுள்ளார். அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க அனைவருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனையில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் நோயாளிகளிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், ஊழியர் பாஸ்கரன் மீது துறை ரீதியான விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.