மாமல்லபுரம் வருகை வாழ்நாளில் மறக்க முடியாதது ‘இந்தியா-சீனா உறவு மேம்பட பாடுபடுவோம்’ சீன அதிபர் ஜின்பிங் பேச்சு

இந்தியா - சீனா உறவு மேம்பட பாடுபடுவோம் என்று பேசிய சீன அதிபர் ஜின்பிங், மாமல்லபுரம் வருகையை தனது வாழ்நாளில் மறக்க முடியாது என்றும் கூறினார்.
மாமல்லபுரம் வருகை வாழ்நாளில் மறக்க முடியாதது ‘இந்தியா-சீனா உறவு மேம்பட பாடுபடுவோம்’ சீன அதிபர் ஜின்பிங் பேச்சு
Published on

சென்னை,

முறைசாரா உச்சி மாநாட்டில் சீன அதிபர் ஜின்பிங் பேசியதாவது:-

வாழ்நாளில் மறக்க முடியாதது

இந்தியா வந்ததில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். உங்களின் வரவேற்பு எங்களுக்கு எல்லாம் உண்மையிலேயே மிகுந்த வியப்பையும், உற்சாகத்தையும் அளித்தது. இதை நானும், என்னுடன் வந்தவர்களும் வெகுவாக உணர்ந்தோம். எனக்கும், என்னுடன் வந்தவர்களுக்கும் இந்த அனுபவம் வாழ்நாளில் மறக்க முடியாததாக இருக்கும்.

இந்தியா - சீனா இடையே நல்லுறவு மேம்பட்டு வருகிறது. இரு நாடுகளும் இதுபோன்று தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும். அதற்கு நாங்கள் எப்போதும் தயாராக இருக்கிறோம். மாமல்லபுரத்தை என் வாழ்க்கையில் இனி ஒருபோதும் மறக்க முடியாது. பல இனிமையான நினைவுகளை இந்த பயணம் எனக்கு தந்துள்ளது.

தமிழக மக்களுக்கு நன்றி

தமிழகத்தின் விருந்தோம்பல் என்னை நெகிழ வைத்துவிட்டது. என்னுடன் வந்த அதிகாரிகளும் இதை உணர்ந்தனர். இதற்காக தமிழக மக்களுக்கு மீண்டும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

பிரதமர் நரேந்திரமோடியும், நானும் நல்ல நண்பர்கள். நாங்கள் இருவரும் 2 நாட்கள் மனம்விட்டு பேசினோம். அது பயனுள்ளதாக இருந்தது. நாங்கள் தொடர்ந்து இரு நாடுகளின் உறவு மேம்பட பாடுபடுவோம். நாங்கள் இருவரும் மிக ஆழமாக பேச்சுவார்த்தை நடத்தி உள்ளோம். இந்த பேச்சுவார்த்தை மிகவும் பயனுள்ளதாக இருந்தது. வரலாற்று முக்கியம் வாய்ந்ததாக இந்த சந்திப்பு நிச்சயம் அமையும்.

மாமல்லபுரம் வருகை எனக்கு பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது. நிச்சயமாக இது ஒரு புதிய தொடக்கமாக அமையும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com