பல்வேறு சம்பவங்களில் உயிர் இழந்த 9 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு

பல்வேறு சம்பவங்களில் உயிர் இழந்த 9 பேரின் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சர் நிதியில் இருந்து தலா ரூ.1 லட்சம் நிதியுதவி அளித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
பல்வேறு சம்பவங்களில் உயிர் இழந்த 9 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு
Published on

சென்னை,

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

காஞ்சீபுரம் மாவட்டம், கடப்பேரி கிராமத்தைச் சேர்ந்த கோதண்டம் என்பவரின் மகன் பிரகாஷ் அரசு பஸ் மோதியும், திருப்பூர் மாவட்டம், கருவலூர் கோவில் திருவிழாவின் போது ஏற்பட்ட விபத்தில் கோயம்புத்தூர் கெம்பட்டி காலனியைச் சேர்ந்த வேணுகோபாலும் உயிரிழந்தனர். நாமக்கல் பெரப்பஞ்சோலை கிராமத்தைச் சேர்ந்த லட்சுமணன் என்பவரின் மகன் சந்திரன் கிணறு தூர்வாரும் போது, மண் சரிந்து விழுந்து பலியானார்.

நாகை வாய்மேடு மேற்கு கிராமத்தைச் சேர்ந்த சுப்பையன் என்பவரின் மனைவி காசியம்மாள் தனது வீட்டின் கூரை இடிந்து விழுந்து இறந்தார். திருச்சி மாவட்டம், அந்தநல்லூர் பகுதி மற்றும் கிராமம் முக்கொம்பு காவேரி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த ராம்ஜி நகரைச் சேர்ந்த கீர்த்திகா மற்றும் திண்டுக்கல் குஜிலியம்பாறையைச் சேர்ந்த ஹரிஹரதீபக் ஆகிய இருவரும் நீரில் மூழ்கி இறந்தனர்.

துறையூர் தாலுகா தென்புறநாடு மஜரா புத்தூர், அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட நடுநிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்த பிரியதர்ஷினி, சிந்துஜா ஆகிய இருவரும் உணவு இடைவேளையின் போது, அருகில் உள்ள குட்டையில் கை கழுவச் சென்ற போது, எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

தூத்துக்குடி புன்னகாயல் கிராமத்தைச் சேர்ந்த அடைக்கலம் என்பவரின் மகன் சேசுராஜ் கோவில் திருவிழாவிற்கு சென்ற இடத்தில், எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட விபத்தில் பலியானார் என்ற செய்திகளை அறிந்து நான் மிகுந்த துயரம் அடைந்தேன்.

சாலை விபத்து மற்றும் எதிர்பாராத விதமாக நடந்த பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த மேற்கண்ட 9 பேரின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் உயிரிழந்த 9 பேரின் குடும்பத்திற்கு தலா ஒரு லட்சம் ரூபாய் முதல்- அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com