

சென்னை,
சென்னையைச் சேர்ந்த கனிமொழி மதி என்பவர் ஐகோர்ட்டில் பொது நல மனு ஒன்று தாக்கல் செய்தார். அதில் கூறியிருந்ததாவது.
உலகில் மிக நீளமான கடற்கரையில் 2-வது கடற்கரையாக சென்னை மெரினா கடற்கரை இருந்து வருகிறது. மெரினா கடற்கரை சமீபகாலமாக மிகவும் அசுத்தமாக உள்ளது. மத்திய அரசு தூய்மை இந்தியா திட்டத்தை செயல் படுத்தி வரும் நிலையில் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த மெரினா கடற்கரை கொஞ்சம் கொஞ்சமாக அதன் பொலிவை இழந்து வருகிறது.
மெரினா நீச்சல் குளம் அருகில் நரிக்குறவர்கள் குடிசை அமைத்து தங்கி உள்ளனர். இதனால், அந்த பகுதியில் பொதுமக்கள் நடமாட முடியாத அளவுக்கு அசுத்தமாகவும், சுகாதார சீர்கேடு ஏற்பட்டும் மோசமாக உள்ளது.
எனவே, நரிக்குறவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி, வேறு இடத்தில் குடி அமர்த்துவதுடன், இனிமேல் மெரினா கடற்கரையில் யாரும் வசிக்காத நிலையை ஏற்படுத்த உத்தரவிட வேண்டும்.
மேலும், கடற்கரை பகுதிகளில் குப்பை அதிகமாக உள்ளது. அவற்றை அகற்றி மெரினா கடற்கரையின் பெருமையை மீட்டெடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் மணிக்குமார், பவானி சுப்பராயன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மெரினா கடற்கரையில் நரிக்குறவர்கள் தங்கி இருப்பது குறித்து மனுதாரர் அரசின் கவனத்துக்கு கொண்டு வரவில்லை என்று அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மெரினா கடற்கரையை சுத்தமாக வைத்திருக்க வேண்டியது அரசின் கடமை. இருந்தாலும், மெரினா கடற்கரையின் நிலை குறித்து அரசின் கவனத்துக்கு மனுதாரர் கொண்டு செல்லாத போது எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்றனர்.
பின்னர் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.