

சென்னை,
சட்டசபையில் நேற்று நடைபெற்ற மீன்வளம், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை, கால்நடை பராமரிப்பு துறை, பால்வளத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தில் பங்கேற்று தி.மு.க. உறுப்பினர் கே.பி.பி.சாமி (திருவொற்றியூர் தொகுதி) பேசினார். அப்போது நடைபெற்ற விவாதம் வருமாறு:-
உறுப்பினர் கே.பி.பி.சாமி:- பால் உற்பத்தியாளர்களுக்கு கடந்த 4 ஆண்டுகளாக பால் விலை உயர்த்தப்படவே இல்லை. அதை உயர்த்த வேண்டும்.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி:- உறுப்பினர் 4 ஆண்டு காலமாக பால் உற்பத்தியாளர்களுக்கு பால் விலை உயர்த்தப்படவில்லை என்ற ஒரு வினா எழுப்பி இருக்கின்றார். நாங்கள் பால் விலையை உயர்த்துவதற்கு தயாராக இருக்கின்றோம். ஆனால் நீங்கள் போராட்டம் செய்யாமல் இருந்தால், நாங்கள் பால் விலையை நிச்சயமாக உயர்த்துவோம். உற்பத்தியாளர்களுக்கு உயர்த்தும் போது, நுகர்வோருக்கும் உயர்த்தி தானே ஆக வேண்டும். பால் உற்பத்தியாளர்களுக்கு அந்த விலையை உயர்த்தி கொடுக்கின்றபோது, அதற்கேற்றவாறு நுகர்வோருக்கு கட்டணம் உயரும். இது உங்களுடைய ஆட்சியிலும் சரி, எங்களுடைய ஆட்சியிலும் சரி, அப்போது தான் இந்த நிர்வாகம் சிறப்பாக நடக்கும்.
இப்போதே நிர்வாகம் நஷ்டத்தில் தான் இயங்கி கொண்டிருக்கிறது. இப்பொழுது நுகர்வோருக்கு வழங்கப்படுகின்ற அந்த கட்டணமும், உற்பத்தியாளர்களுக்கு வழங்குகின்ற கட்டணத்திலும் வித்தியாசம் இருக்கின்றது. ஆகவே, இன்றைக்கு உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்படுகின்ற விலையிலும், நுகர்வோருக்கு கொடுக்கின்ற விலையிலும் வேறுபாடு இருக்கின்றது. அதனால் தான் இப்போது பல்வேறு கூட்டுறவு சங்கங்கள் நஷ்டத்தில் இயங்கி கொண்டிருக்கின்றன.
ஆகவே, இது அரசுனுடைய கவனத்திற்கு ஏற்கனவே விவசாய சங்கங்கள், பால் உற்பத்தியாளர்கள் சங்கங்கள் எல்லாம் கொண்டு வந்திருக்கின்றது. அதை பரிசீலித்துக்கொண்டு இருக்கின்றோம். ஆகவே, பால் உற்பத்தியாளர்களுக்கு விலை உயர்த்தி கொடுப்பதில் எந்தவித ஒரு கஷ்டமும் அரசுக்கு இல்லை. ஆனால் எதிர்க்கட்சிகள் எல்லாம் இதை வைத்துக்கொண்டு அரசியல் செய்வார்கள். ஏனென்றால் நுகர்வோருக்கு விலை உயர்த்த வேண்டும். நுகர்வோருக்கு விலை உயர்த்துகின்ற போது, பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள். அப்படி ஒரு கோரிக்கை எதிர்க்கட்சியில் இருந்து வரும். ஆகவே, நீங்களும் இதற்கு சம்மதித்தால் பால் உற்பத்தியாளர்களுக்கு உயர்த்த வேண்டிய தொகையை அரசு நிச்சயமாக உயர்த்தும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
உறுப்பினர் கே.பி.பி.சாமி:- மீன்பிடி தடைகாலத்தை மழை காலமான அக்டோபர் 15-ந் தேதி முதல் டிசம்பர் 15-ந் தேதி வரை மாற்றியமைக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
அமைச்சர் ஜெயக்குமார்:- இது நல்ல யோசனை. மீன்களின் இனப்பெருக்க காலம் ஏப்ரல், மே, ஜூன் மாதங்கள் என்று கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கடற்கரை மாநிலங்கள் ஒன்று சேர்ந்து முடிவு செய்துள்ளன. இதை அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களுக்கு மாற்றுவதன் மூலம் இயற்கை பேரிடரில் இருந்து மீனவர்களை பாதுகாக்க முடியும். அரசின் முடிவும் இதுதான் என்றாலும், மாநில அரசே இதை செயல்படுத்த முடியாது. மத்திய அரசாங்கத்திடம் வலியுறுத்தி அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களை மீன்பிடி காலமாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.