பள்ளிக்கு மாணவர்கள் செல்போன் கொண்டு வந்தால் பறிமுதல் செய்யப்படும் அமைச்சர் எச்சரிக்கை

பள்ளி வகுப்பறைக்கு மாணவர்கள் செல்போன் கொண்டுவந்தால் உடனடியாக பறிமுதல் செய்யப்படும். அவை திரும்ப வழங்கப்படமாட்டாது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.
பள்ளிக்கு மாணவர்கள் செல்போன் கொண்டு வந்தால் பறிமுதல் செய்யப்படும் அமைச்சர் எச்சரிக்கை
Published on

திருச்சி,

நீட் தேர்வுக்கு எதிரான முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் குரல் நியாயமானது. பல சட்ட போராட்டங்களில் வெற்றி பெற்றதுபோல் நீட் தேர்வுக்கு எதிரான சட்ட போராட்டத்திலும் முதல்-அமைச்சர் வெற்றி பெறுவார். அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகரித்து வருகிறது. எனவே உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வருகிறோம்.

செல்போன் பறிமுதல்

இந்த கல்வி ஆண்டில் அரசு பள்ளிகளில் சேரும் மாணவர்களை தக்கவைத்துக்கொள்ள அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 9 ஆயிரத்து 494 ஆசிரியர்கள் புதிதாக நியமிக்கப்பட உள்ளனர். கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக மாணவர்களிடையே செல்போன் பயன்பாடு அதிகரித்திருப்பது உண்மை தான். செல்போனை மாணவர்கள் வகுப்பறைகளுக்கு கொண்டு வரக்கூடாது. மீறி கொண்டு வந்தால் செல்போன் பறிமுதல் செய்யப்படுவதுடன், அவை மீண்டும் தரப்படமாட்டாது.

மாணவர்கள் மனதளவில் இறுக்கத்துடன் உள்ளனர். எனவே 11, 12-ம் வகுப்புகளுக்கு பள்ளி திறந்து 5 நாட்களுக்கு வகுப்புகள் நடத்தப்படமாட்டாது. தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் மூலம் மாணவர்களுக்கு நாள்தோறும் 2 மணி நேரம் உளவியல் பயிற்சிகள், போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு அளிக்கப்படும்.

இல்லம் தேடி கல்வி திட்டம்

தற்போது பள்ளி திறக்கப்பட்டாலும் இல்லம் தேடி கல்வி திட்டம் தொடர்ந்து நடைபெறும். தனியார் பள்ளியில் கட்டாய மாற்றுச்சான்றிதழ் கொடுக்க கூடாது என்று அறிவுறுத்தி உள்ளோம்.

தற்போது 90 சதவீத மாணவர்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். தடுப்பூசி செலுத்தாத 10 சதவீத மாணவர்கள் சுகாதாரத்துறை மூலமாக உடனடியாக தடுப்பூசி செலுத்திக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com