சிறுவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

தமிழகத்தில் 12 முதல் 14 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி போடும் பணியை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
சிறுவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்
Published on

சென்னை,

சென்னை அசோக்நகர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் 12 முதல் 14 வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமிகளுக்கு கோர்பேவேக்ஸ் தடுப்பூசி போடும் பணியை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இந்தநிகழ்ச்சியில் பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், எம்.எல்.ஏ.க்கள் த.வேலு, ஜெ.கருணாநிதி, ஏ.எம்.வி.பிரபாகர் ராஜா, மருத்துவத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அப்போது அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

21.21 லட்சம் பேர்

தமிழகத்தில் 21 லட்சத்து 21 ஆயிரம் சிறுவர்களை இலக்கு வைத்து தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. சிறுவர்களின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் சம்மதத்துடன் சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும். பூஸ்டர் தடுப்பூசியை பொறுத்தவரை 4 லட்சத்து 3 ஆயிரத்து 652 பேருக்கு போடப்பட்டுள்ளது. இந்தநிலையில், 60 வயதை கடந்த இணை நோய் இல்லாதவர்களுக்கும் இன்று முதல் பூஸ்டர் தடுப்பூசி போடும் பணியும் தொடங்கப்பட்டுள்ளது.அந்தவகையில் 60 வயதை கடந்த 1 கோடியே 4 லட்சத்து 19 ஆயிரம் பேர் உள்ளனர். இவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்படும். தமிழகத்தில் 8 லட்சத்து 30 ஆயிரத்து 870 கோவேக்சின் தடுப்பூசியும், 28 லட்சத்து 81 ஆயிரத்து 220 கோவிஷீல்டு தடுப்பூசியும், 21 லட்சத்து 60 ஆயிரம் கோர்பேவேக்ஸ் தடுப்பூசியும் கையிருப்பில் உள்ளது.

கவர்னர் ஒப்புதல்

தமிழகத்தில் மருத்துவ மேற்படிப்புகளில் அரசு டாக்டர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்திருப்பது, அனைத்து அரசு டாக்டர்களுக்கும் மகிழ்ச்சி அளிக்கக்கூடிய செய்தி. இது முதல்-அமைச்சரின் சமூக நீதிக்கு கிடைத்திருக்கக்கூடிய வெற்றி.

அதேபோல், நேற்று (நேற்று முன்தினம்) கவர்னரிடம் தமிழக முதல்-அமைச்சர், நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கு, ஏற்கனவே நிறைவேற்றி அனுப்பப்பட்ட சட்ட முன்வடிவை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். கவர்னரும் உடனடியாக ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பதாக ஒப்புக்கொண்டுள்ளார்.

மேலும், சித்த மருத்துவ பல்கலைக்கழகம் தமிழகத்தில் உருவாவதற்கும் கவர்னர் ஒப்புதல் தந்துள்ளார்.

முன்னுரிமை அடிப்படையில் பணி

கொரோனா தொற்று முழுமையாக குறைந்துள்ளதால், தற்காலிகமாக பணியமர்த்தப்பட்ட நர்சுகளுக்கு மார்ச் 31-ந் தேதி வரை மட்டுமே பணி நீட்டிக்கப்பட்டிருந்தது.

மருத்துவத்துறையில் உள்ள காலி பணியிடங்களை கண்டறிந்து, மார்ச் 31-ந்தேதிக்கு பிறகு எம்.ஆர்.பி. மூலம் நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், கொரோனா காலக்கட்டத்தில் பணி புரிந்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கி, எதிர்காலத்தில் மருத்துவத்துறையில் பணி நிரப்பும் போது, சான்றிதழ் வைத்திருப்பவர்களுக்கு சலுகை வழங்கி முன்னுரிமை அடிப்படையில் பணி வழங்கப்படும். நிச்சயம் ஏதாவது ஒருவகையில் அவர்களுக்கு உறுதுணையாக இருப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com