ஈரோட்டில் தேர்தல் பிரசாரத்தின்போது பரிதாபம்: அ.தி.மு.க. பிரமுகர் மயங்கி விழுந்து சாவு...!

ஈரோட்டில் தேர்தல் பிரசாரத்தின் போது மயங்கி விழுந்து அ.தி.மு.க. பிரமுகர் பரிதாபமாக இறந்தார்.
ஈரோட்டில் தேர்தல் பிரசாரத்தின்போது பரிதாபம்: அ.தி.மு.க. பிரமுகர் மயங்கி விழுந்து சாவு...!
Published on

ஈரோடு,

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி பல்வேறு அரசியல் கட்சியினர் ஈரோட்டில் முகாமிட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்குகள் சேகரித்து வருகிறார்கள்.

அதன்படி கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள அண்ணா கிராமம் பகுதியை சேர்ந்த கந்தன் (வயது 51) என்பவரும் தேர்தல் பணிக்காக ஈரோட்டுக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு வந்தார். இவர் அண்ணா கிராமம் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளராக இருந்தார். தீவிர பிரசாரம் கந்தன் ஈரோட்டில் தங்கி இருந்து தினமும் பிரசாரத்திற்கு சென்று வந்தார்.

அதன்படி நேற்று ஈரோடு பிபி அக்ரகாரம் அரசு நடுநிலை பள்ளிக்கூடம் அருகில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு இரட்டை இலை சின்னத்துக்கு ஆதரவு திரட்டினார். அப்போது காலை 10 மணி அளவில் அவர் திடீரென நெஞ்சு வலிப்பதாக கூறினார். இதையடுத்து அவர் மயங்கி விழுந்தார். இதைப் பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த அ.தி.மு.க. தொண்டர்கள் அவரை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் கந்தன் பரிதாபமாக இறந்தார். இதைத் தொடர்ந்து அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது. தேர்தல் பிரசாரத்தின் போது அ.தி.மு.க. பிரமுகர் மயங்கி விழுந்து இறந்த சம்பவம் கட்சி நிர்வாகிகள் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com