அரசியலில் இணைவதை விட ரஜினியும், கமலும் சினிமாவில் சேர்ந்து நடிக்கலாம் முத்தரசன் பேட்டி

அரசியலில் இணைவதை விட ரஜினியும், கமலும் சேர்ந்து சினிமாவில் நடிக்கலாம் என முத்தரசன் கூறினார்.
அரசியலில் இணைவதை விட ரஜினியும், கமலும் சினிமாவில் சேர்ந்து நடிக்கலாம் முத்தரசன் பேட்டி
Published on

கும்பகோணம்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

மேயர்-நகரசபை தலைவர்

உள்ளாட்சி தேர்தல் கடந்த 3 ஆண்டுகளாக நடத்தப்படவில்லை. இதன் காரணமாக அடிப்படை தேவைகளான குடிநீர், மின்சாரம் உள்ளிட்டவை தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படவில்லை.

உள்ளாட்சி அமைப்புகளில் பல்வேறு ஊழல்கள் நடைபெற்றுள்ளன. மேயர், நகரசபை தலைவர், பேரூராட்சி தலைவர் ஆகிய பதவிகளுக்கு எக்காரணத்தை கொண்டும் மறைமுக தேர்தல் நடத்தக்கூடாது. இது ஜனநாயக விரோத செயல்களுக்கு வழிவகை செய்யும்.

ஒப்புதல் அளிக்க கூடாது

மறைமுக தேர்தல் நடத்த அரசு திட்டமிட்டு இருந்தால் அதற்கு கவர்னர் ஒப்புதல் அளிக்க கூடாது. சொத்து வரி பல மடங்கு உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது வரிகள் வசூல் செய்வது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், கூடுதலாக வசூல் செய்யப்பட்ட வரிகள், வரும் காலங்களில் வரவு வைக்கப்படும் எனவும் உள்ளாட்சி துறை அமைச்சர் அறிவித்து உள்ளார்.

வரிகள் உயர்த்தப்பட்டதற்கு பலமுறை போராட்டம் நடத்தியபோது வரியை குறைக்காத இந்த அரசு தற்போது உள்ளாட்சி தேர்தலை கருத்தில் கொண்டே வரி உயர்வை நிறுத்தி வைத்துள்ளது.

சேர்ந்து நடிக்கலாம்

டெல்டா பகுதிகளில் கடுமையான உரம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையின்போது டாஸ்மாக் விற்பனைக்கு இலக்கு நிர்ணயித்த தமிழக அரசு, உரம் கையிருப்பில் வைக்க இலக்கு நிர்ணயிக்கவில்லை. டாஸ்மாக்கில் காட்டிய ஆர்வத்தை உரம் விற்பனையில் அரசு காட்டவில்லை. எனவே விவசாயிகளுக்கு உரம் தட்டுப்பாடின்றி கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் அரசியலில் இணைவதை விட திரைப்படத்தில் இணைந்து நடித்தால் நன்றாக இருக்கும். இருவரும் நல்ல நடிகர்கள்.

இவ்வாறு முத்தரசன் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com