விடாமுயற்சியும், அர்ப்பணிப்பும் எனது மகனின் வெற்றிக்கு காரணம்

விஞ்ஞானி வீரமுத்துவேலின் வெற்றிக்கு விடாமுயற்சியும், அர்ப்பணிப்புமே காரணம் என்று அவரது தந்தை பழனிவேல் கூறினார்.
விடாமுயற்சியும், அர்ப்பணிப்பும் எனது மகனின் வெற்றிக்கு காரணம்
Published on

விழுப்புரம்

சந்திரயான்-3 ராக்கெட்

நிலவில் சந்திரயான்-3 தரை இறங்கியதால் வரலாற்று சாதனை படைத்தது இந்தியா. நாடே கொண்டாடும் இந்த திட்ட பணியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் குழுவில் தேசிய வளிமண்டல ஆராய்ச்சி ஆய்வக இயக்குனர் அமித்குமார் பத்ரா, சந்திரயான் 3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேல், இணை திட்ட இயக்குனர் கல்பனா உள்பட பலர் இடம்பெற்றனர்.

இவர்களில் இஸ்ரோவின் சந்திரயான் 3 திட்டத்தை வெற்றிகரமாக இயக்கிய திட்ட இயக்குனரான இஸ்ரோ விஞ்ஞானி வீரமுத்துவேல் விழுப்புரத்தை சேர்ந்தவர் ஆவார்.

இவர் தற்போது, குடும்பத்துடன் பெங்களூருவில் வசித்து வருகிறார். இவருடைய தந்தை பழனிவேல் ஓய்வுபெற்ற ரெயில்வே ஊழியர் ஆவார். அவர் தற்போது தென்னக ரெயில்வே மஸ்தூர் யூனியன் (எஸ்.ஆர்.எம்.யூ.) தொழிற்சங்க மத்திய செயல் தலைவராக உள்ளார். தாய் ரமணி குடும்பத்தலைவி. இவர்கள் இருவரும் விழுப்புரத்தில் வசித்து வருகின்றனர்.

இஸ்ரோவில் பணி

இஸ்ரோ விஞ்ஞானி வீரமுத்துவேல், விழுப்புரம் ரெயில்வே பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை படித்தார். பின்னர் விழுப்புரம் ஏழுமலை பாலிடெக்னிக் கல்லூரியில் மெக்கானிக்கல் டிப்ளமோ முடித்தார். அதன் பிறகு சென்னை சாய்ராம் கல்லூரியில் பி.இ. மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்தார்.

தொடர்ந்து, திருச்சியில் உள்ள ஆர்.இ.சி. அரசு பொறியியல் கல்லூரியில் எம்.இ. மெக்கானிக்கல் பயின்றார். அதன் பிறகு 2014-ல் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான 'இஸ்ரோ'வில் பணிக்கு சேர்ந்தார். இதனிடையே அவர், சென்னை ஐ.ஐ.டி.யிலும் பயிற்சி பெற்றார். அவர் தன்னுடைய தனித்திறமையால் உயர்ந்து தற்போது சந்திரயான்- 3 திட்ட இயக்குனராக பணியாற்றி வருகிறார். இதன் மூலம் அவர் விழுப்புரம் மண்ணுக்கு மட்டுமின்றி இந்திய திருநாட்டிற்கே பெருமை சேர்த்துள்ளதாக அவரது தந்தை பழனிவேல் பெருமிதத்துடன் கூறினார்.

வரலாற்று சாதனை

இது தொடர்பாக பழனிவேல் மேலும் கூறுகையில், இன்றைய நாள் இந்தியாவுக்கும், இந்திய மக்களுக்கும், குறிப்பாக தமிழகத்திற்கும் மறக்க முடியாத நாள். இஸ்ரோ விண்கல திட்டத்தில் எனது மகன் வீரமுத்துவேலுக்கு பொறுப்பு கொடுக்கப்பட்ட நாள் முதல் அவர் பெரும் முயற்சி எடுத்து வீட்டுக்கு கூட வராமல் அவரது குழு சிறப்பாக செயல்பட்டது.

இந்த விண்கலத்தை உலகிலேயே முதன்முதலாக இந்தியா இன்று, தென்பக்கத்தில் அனுப்பி வெற்றி கண்டிருக்கிறது. இது ஒரு வரலாற்று சாதனையாகும்.

இந்த திட்டத்துக்காக எனது மகன் வீரமுத்துவேல் அவரது பெயருக்கேற்ற வகையில் விடாமுயற்சி, வீரமுயற்சி எடுத்து வீரமாக வெற்றி கண்டதை நினைத்துப் பார்க்கையில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இந்த தருணத்தில் இந்திய மக்கள் அனைவருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். இந்த வெற்றி என்பது தமிழகத்திற்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகவே பார்க்கிறேன்.

அர்ப்பணிப்பு உணர்வுடன்...

இந்த வெற்றியை நினைத்து பார்க்கையில் வீரமுத்துவேலின் தந்தையாக நான் எல்லையில்லா மகிழ்ச்சியில் உள்ளேன். இந்த வெற்றிக்கு காரணம் நான் வேண்டிய இறைவன்தான். இந்த திட்டத்தில் என்றைக்கு பொறுப்பாளராக எனது மகன் நியமிக்கப்பட்டாரோ அன்றைய தினத்தில் இருந்தே விழுப்புரத்துக்கு வரவில்லை, என்னுடனும் அடிக்கடி பேச மாட்டார். குறிப்பாக எனது மகளின் திருமண நிச்சயதார்த்தத்துக்கும் வர முடியாது என்று சொன்னார். அதுபோல் கடந்த 20-ந் தேதி எனது மகளின் திருமணம் நடந்தது. அதற்கும் அவர் வர முடியாது என்று சொன்னார். நான் பரவாயில்லை, உன்னுடைய பணி இந்த நாட்டுக்கே முக்கியம் என்று சொல்லி அவரை மேலும் ஊக்கப்படுத்தினேன். அவர் என்னைப்பற்றியோ, எனது குடும்பத்தை பற்றியோ நினைக்கமாட்டார். அவரது பணியில் மிகுந்த ஈடுபாட்டுடனும், அர்ப்பணிப்பு உணர்வுடனும் இருப்பார். இப்படிப்பட்ட சூழலில் அவர் இன்றைக்கு வெற்றி கண்டிருக்கிறார் என்று ஆனந்த கண்ணீருடன் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com