நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடுமா? கே.எஸ்.அழகிரி பதில்

நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடுமா? என்பதற்கு கே.எஸ்.அழகிரி பதில் அளித்துள்ளார்.
நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடுமா? கே.எஸ்.அழகிரி பதில்
Published on

சென்னை,

சுதந்திரபோராட்ட வீரர் எஸ்.சத்தியமூர்த்தி, மறைந்த முன்னாள் த.மா.கா. தலைவர் ஜி.கே.மூப்பனார் ஆகியோர் பிறந்தநாள் விழா தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி சத்தியமூர்த்தி பவனில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எஸ்.சத்தியமூர்த்தி, ஜி.கே.மூப்பனார் ஆகியோர் உருவப்படங்களுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதையடுத்து முன்னாள் தலைவர்கள் குமரி அனந்தன், கிருஷ்ணசாமி, மாநில பொதுச்செயலாளர் சிரஞ்சீவி, பொதுக்குழு உறுப்பினர் எஸ்.கே.அகமது அலி, மகளிரணி தலைவி ஜான்சிராணி, ஓ.பி.சி. பிரிவு மாநில துணை தலைவர் தன்ராஜ், எஸ்.சி. பிரிவு மாவட்ட தலைவர் ரஞ்சன்குமார் உள்பட காங்கிரஸ் கட்சியின் மாநில-மாவட்ட நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இதைத்தொடர்ந்து கே.எஸ்.அழகிரி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பிரதமர் நரேந்திர மோடி அரசு முப்படைகளுக்கும் ஒரே தளபதியை நியமிக்கப்போவதாக அறிவித்திருப்பது ஜனநாயகத்தின் மீது விழுந்த பெரிய அடியாகும். முதன்முதலில் அணு ஆயுதத்தை பயன்படுத்துவோம் என ராஜ்நாத் சிங் அறிவித்துள்ளது ஆபத்தானது. போர் மிரட்டல் விடுப்பது ஜனநாயகம் அல்ல. பால் விலை உயர்வு சாதாரண மக்களுக்கு சிரமம். பால் உற்பத்தியாளர்களும் பயன் அடையவேண்டும். அதே சமயம் நுகர்வோர் மீதும் சுமையை ஏற்றக்கூடாது.

நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் யார் போட்டியிடவேண்டும் என்பது குறித்து தி.மு.க. உடன் பேசி முடிவு எடுப்போம். தி.மு.க.வை போன்று காங்கிரஸ் கட்சியினரும் அங்கு தேர்தல் பணியை தொடங்கி விட்டார்கள். தி.மு.க.வுக்கு அந்த தொகுதியை விட்டுக்கொடுப்பது பற்றி கட்சியின் மேலிடம் தான் முடிவு எடுக்கும். எங்கள் கிராமத்தில் நாங்கள் நடத்தும் கல்லூரியில் ஒழுங்கு நடவடிக்கை காரணமாக மாணவர் ஒருவர் வெளியேற்றம் செய்யப்பட்டார். அந்த மாணவர் கொடுத்த புகாருக்கு, கப்பல் துறை இயக்ககத்திடம் நாங்கள் விளக்கம் அளித்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com