பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டத்தை கண்காணிக்க புதிய செயலி..!

பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை கண்காணிக்க புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டத்தை கண்காணிக்க புதிய செயலி..!
Published on

சென்னை,

1 முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள அரசு பள்ளி குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 15-ந் தேதி தொடங்கி வைத்தார். அதை தொடர்ந்து சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது.

காலை உணவு திட்டத்தின் செயல்பாடு பற்றிய ஆய்வு மற்றும் தரவுகளின் அடிப்படையில் இனி வரும் ஆண்டுகளில் இந்த திட்டத்தை விரிவுபடுத்துவது பற்றி பரிசீலனை செய்யப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், பள்ளி மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் முறையாக செயல்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்க சி.எம்.13எப்.எஸ். என்ற புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய செயலியை சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி அறிமுகப்படுத்தி உள்ளார். முதல்-அமைச்சரே இதனை நேரடியாக கண்காணிக்கும் வகையில் இந்த செயலி பயன்பாட்டில் உள்ளது.

அதிகாலையில் சமையல் செய்ய தொடங்கும் நேரம், முடியும் நேரம், அங்கிருந்து வாகனத்தில் கொண்டு செல்லும் நேரம், பள்ளியில் வினியோகிக்கும் நேரம், குழந்தைகளுக்கு உணவு வழங்கும் நேரம் போன்றவற்றை இந்த செயலி மூலம் உடனுக்குடன் காணும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எந்த சமையல் கூடத்தில் உணவு வினியோகம் செய்வதில் தாமதம் ஏற்படுகிறது.தாமதம் இல்லாமல் சரியான நேரத்தில் உணவு பள்ளிகளுக்கு செல்கிறதா என்பதை இதன் மூலம் கண்காணிக்கிறார்கள். சரியான நேரம், தாமதம், விடுமுறை போன்ற விவரங்கள் செயலி மூலம் பெறப்படுகின்றன. தாமதம் ஏற்பட்டால் அதற்கான தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com