தமிழக பா.ஜ.க.வுக்கு 2 வாரத்துக்குள் புதிய தலைவர்; தேசிய பொதுச்செயலாளர் முரளிதரராவ் பேட்டி

தமிழக பா.ஜ.க.வுக்கு 2 வாரத்துக்குள் புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று அக்கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் முரளிதரராவ் தெரிவித்துள்ளார்.
தமிழக பா.ஜ.க.வுக்கு 2 வாரத்துக்குள் புதிய தலைவர்; தேசிய பொதுச்செயலாளர் முரளிதரராவ் பேட்டி
Published on

சென்னை,

பா.ஜ.க. சார்பில் சென்னை தியாகராயநகரில் உள்ள திருமண மண்டபத்தில் தென் இந்தியாவின் எதிர்கால அரசியல் என்ற தலைப்பில் கலந்துரையாடல் கூட்டம் நடந்தது. இதில் அக்கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் முரளிதரராவ் கலந்துகொண்டு, கட்சி நிர்வாகிகள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

முன்னதாக முரளிதரராவ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

இலங்கை தமிழர்களின் நலனை கருத்தில் கொண்டே மத்திய அரசு செயல்படுகிறது. அவர்களின் வாழ்வாதாரம் மேம்படவும், மீனவர்கள் நலனை பேணிக்காக்கவும் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்தியா-இலங்கை ஆகிய நாடுகளின் மீனவர்கள் பிரச்சினையை சரி செய்ய மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இலங்கையில் வாழும் தமிழக மக்களின் நலனுக்காக மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது. இதனால் இலங்கையில் வாழும் தமிழர்களின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும்.

பா.ஜ.க. தேசிய செயல் தலைவராக பொறுப்பு ஏற்ற பின்னர் முதல் முறையாக ஜே.பி.நட்டா நாளை (இன்று) சென்னை வருகிறார். கட்சியின் முக்கிய தலைவர்களுடன் உள்ளாட்சி தேர்தல், தமிழக பா.ஜ.க.வுக்கு மாநில தலைவரை நியமிப்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து அவர் ஆலோசனை செய்ய உள்ளார். இதேபோல வருங்காலத்தில் பா.ஜ.க.வின் பணிகள் எப்படி இருக்கவேண்டும் என்பது குறித்தும் நிர்வாகிகளுக்கு அறிவுரைகளை வழங்குகிறார்.

தமிழகம் முக்கிய மாநிலம் மட்டும் அல்ல, சவாலான மாநிலமும் கூட. தற்போது வரையிலும் அ.தி.மு.க. உடன் கூட்டணி தொடருகிறது. அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி கணவன்-மனைவி போன்றது. வெளிப்படையாக இப்போது எதுவும் சொல்ல முடியாது. தமிழக அரசு சிறப்பாக செயல்படுகிறது. ஜனவரி மாதத்தில் இருந்து தமிழகத்தில் பல்வேறு அரசியல் மாற்றங்கள் நிகழும். தமிழக பா.ஜ.க.வுக்கு 2 வார காலத்துக்குள் தேர்தல் நடத்தி தலைவரை தேர்ந்தெடுப்போம்.

தி.மு.க. போல குடும்ப உறுப்பினர்களை தலைவராக தேர்ந்தெடுக்கமாட்டோம். தி.மு.க.வை பொறுத்தமட்டில் அவர்களே நிர்வாகிகளை தேர்வு செய்வார்கள். ஆனால் நாங்கள் கட்சி தொண்டர்கள் இடையே தேர்தல் நடத்தி தான் தலைவரை தேர்ந்தெடுப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com