தென்பெண்ணையாற்றில் மணல் குவாரி அமைக்கக்கூடாது

பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்பதால் தென்பெண்ணையாற்றில் எக்காரணத்தை கொண்டும் மணல் குவாரி அமைக்கக்கூடாது என்று குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்
தென்பெண்ணையாற்றில் மணல் குவாரி அமைக்கக்கூடாது
Published on

விழுப்புரம்

விவசாயிகள் குறைகேட்பு கூட்டம்

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் மோகன் தலைமை தாங்கி விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றார். கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:-

நொளம்பூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் பயிர் கடன் கேட்டு விண்ணப்பித்த 60-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு பயிர் கடன் விரைந்து வழங்க வேண்டும். கந்தாடு ஊராட்சியில் இலம்பி என்ற தட்டம்மை நோயால் கால்நடைகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கால்நடை ஆஸ்பத்திரிகளில் மருந்துகள் தட்டுப்பாட்டை போக்க வேண்டும். அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் தவறான சிகிச்சைகளால் உயிரிழப்பு சம்பவம் நடந்து வருகிறது. பிரம்மதேசத்தில் நடந்த சம்பவம் எல்லோருக்கும் தெரியும். எனவே 24 மணி நேரமும் டாக்டர்கள், செவிலியர்கள் பணியில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு

குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்ட 35 ஏரிகளில் முட்செடிகள் அகற்றப்படாமல் உள்ளது. எல்லீஸ்சத்திரம், தளவானூர் அணைக்கட்டுகளை விரைந்து சீரமைக்க வேண்டும். ஏனாதிமங்கலத்தில் அரசு மணல் குவாரி அமைத்தால் விவசாயிகள், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். இரவு நேரங்களில் மணல் கொள்ளையும் நடக்க வாய்ப்பிருக்கிறது. எனவே எக்காரணத்தை கொண்டும் மணல் குவாரி அமைக்கக்கூடாது. ஆழாங்கால் வாய்க்கால் நெடுகிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். கால்நடைகளை இலம்பி நோய் தாக்கி வருவதால் சித்தா முறையில் வைத்தியம் பார்த்தால்தான் குணமாகும். அதற்கான சிறப்பு முகாமை நடத்த வேண்டும். சர்க்கரை ஆலைகளில் கரும்புக்கான நிலுவைத்தொகையை பெற்றுத்தர விரைந்து ஏற்பாடு செய்யுங்கள்.

வேளாண்மைத்துறை சார்பில் விவசாயிகளுக்கு சரிவர பயிற்சி கொடுப்பதில்லை. பட்டா மாற்றம் கோரி விண்ணப்பித்த விவசாயிகளுக்கு துரிதமாக வழங்க வேண்டும். அதுபோல் காலதாமதமின்றி பயிர் கடன் வழங்குவதையும் துரிதப்படுத்த வேண்டும். மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் என 13 ஆயிரம் பேருக்கு நிறுத்தப்பட்டுள்ள மாதாந்திர உதவித்தொகையை மீண்டும் வழங்க வேண்டும். விழுப்புரம் பகுதியில் இயற்கை விவசாயிகள் உற்பத்தி செய்கிற பொருட்களை விற்பனை செய்ய போதிய இடவசதி ஏற்படுத்தித்தர வேண்டும்.

நடவடிக்கை

இவ்வாறு விவசாயிகள் கூறினர். இதற்கு பதிலளித்து மாவட்ட கலெக்டர் மோகன் பேசியதாவது:-

இலம்பி நோய் தாக்குதலில் இருந்து கால்நடைகளை பாதுகாக்க மாவட்டம் முழுவதும் 260 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது. இந்நோய்க்கு உரிய சிகிச்சை, மருந்துகள் வழங்கப்படும். அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் 15 நாட்களுக்கு ஒருமுறை டாக்டர்களுடன் ஆலோசனைக்கூட்டம் நடத்தப்பட்டு உரிய அறிவுரை வழங்கப்பட்டு வருகிறது. மரக்காணம் பிரம்மதேசம் சம்பவம் குறித்து சப்-கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார். விசாரணை அறிக்கையில் யார் மீது தவறு இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். எல்லீஸ்சத்திரம், தளவானூர் அணைக்கட்டுகள் குறித்து முதல்-அமைச்சரிடம் நேரடியாக எடுத்துக்கூறப்பட்டுள்ளது. ஒரு வாரத்தில் எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டு புதியதாக கட்டுவதற்கான அரசாணை வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நீர்வரத்து வாய்க்கால்கள் தூர்வாரும் பணி தடையின்றி நடந்து வருகிறது. ஏேதனும் புகார் இருந்தால் என்னுடைய கவனத்திற்கு கொண்டு வரலாம். இயற்கை விவசாயிகளின் உற்பத்தி பொருட்களை மாலைநேர உழவர் சந்தையில் விற்கலாம். விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகில் தனியாக வாடகை கடைகள் ஒதுக்கவும், திங்கட்கிழமைதோறும் கலெக்டர் அலுவலகத்தில் அரங்குகள் அமைக்கவும் ஏற்பாடு செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com