

அமராவதி அணை
திருப்பூர் மாவட்ட மக்களின் தேவைகளையும், கரூர் மாவட்ட மக்களின் தேவைகளையும் ஒருசேர பூர்த்தி செய்யும் அமராவதி ஆறானது கரூர் மாவட்டம், திருமுக்கூடலூர் என்ற இடத்தில் காவிரியில் கலந்து விடுகிறது. அமராவதி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கனமழை பெய்ததால், அமராவதி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டது.இதன் காரணமாக கரூர் ஆண்டாங்கோவில் தடுப்பணையில் தண்ணீர் வரத்து நாளுக்கு நாள் அதிகரித்து சென்று, கரூர் அமராவதி ஆற்றின் இருகரைகளையும் தொட்டு தண்ணீர் சென்றது.
கருவேல மரங்கள்
இந்தநிலையில் ஆண்டாங்கோவில் தடுப்பணையை தாண்டி ஆற்றுப்பகுதியின் சில இடங்களில் கருவேல மரங்கள் அதிகளவில் ஆக்கிரமித்துள்ளன. இந்த மரங்களின் வேர்கள் நிலத்தடி நீரை வெகுவாக உறிஞ்சி விடுகிறது. இதனால் மற்ற செடி, கொடிகள் வளர்வது பாதிக்கப்படுகிறது. கருவேல மரங்கள் நிலத்தடி நீர் மட்டத்தை பாதிக்கும் திறன் கொண்டது என்பதால் இந்த பகுதியில் உள்ள நீர்வளமும் கடுமையாக பாதிக்கப்படும் சூழல் உள்ளது.வடகிழக்கு பருவ மழை விரைவில் தொடங்க உள்ள நிலையில் கருவேல மரங்களை முற்றிலும் ஆற்றுப்பகுதியில் இருந்து அகற்ற தேவையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.