

வனப்பகுதியில் கோவில்
பள்ளிப்பட்டு அடுத்த ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றியம் ஸ்ரீ காளிகாபுரம் கிராமத்திற்கு அருகே பஞ்சாட்சரம் மலையில் மரகதேஸ்வரர் கோவில் உள்ளது. மலைமேல் கோவில் அமைந்துள்ளதால் காலபோக்கில் அங்கு மக்கள் செல்லாததால் கோவிலில் வைக்கப்பட்டிருந்த சிவன் சிலை சிதிலமடைந்தது. இதையடுத்து 3 அடி உயரத்தில் சிவலிங்கம் மற்றும் நந்தி சிலைகளை வைக்க கிராம மக்கள் முடிவு செய்து கடந்த மார்ச் மாதம் மலை உச்சியில் அவற்றை பிரதிஷ்டை செய்ய சென்றனர். அதற்கு வனத்துறையினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களது எதிர்ப்பையும் மீறி சிவலிங்கம் மற்றும் நந்தி சிலை கோவிலில் வைத்து பூஜைகள் நடத்தியதாக தெரிகிறது.
கிராம மக்கள் எதிர்ப்பு
இந்நிலையில் வனத்துறை அனுமதி இன்றி மலைக்கோவிலில் வைக்கப்பட்டுள்ள சிவலிங்கம், நந்தி சிலைகளை அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் வனத்துறையினர் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து மலைக்கோவிலில் உள்ள சிவலிங்கம் மற்றும் நந்தி சிலைகளை அப்புறப்படுத்த கூடாது என்று கூறி வனத்துறையினரின் நடவடிக்கைகளை கைவிடக் கோரி நேற்று பள்ளிப்பட்டு வனத்துறை அலுவலகத்தைச் முற்றுகையிட்டனர்.
காலை முதல் மாலை வரை வனத்துறை அலுவலர்கள் யாரும் பேச்சுவார்த்தைக்கு வராததால் அங்கேயே காத்திருந்து மதிய உணவை சமைத்து சாப்பிட்டனர். மாலை 5 மணி வரை காத்திருந்து யாரும் வராததால் பின்னர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.