

வடுவூர்:
வடுவூர் கோதண்டராமர் கோவிலில் பவித்ர உற்சவம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பவித்ர உற்சவம்
வைணவ கோவில்களில் வருடம் முழுவதும் செய்யப்படும் பூஜை முறைகளில் தெரிந்தோ தெரியாமலோ நிகழும் தவறுகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு ஆண்டுக்கு ஒருமுறை பவித்ர உற்சவம் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி வடுவூர் கோதண்டராமர் கோவிலில் பவித்ர உற்சவம் நடந்தது. ஆண்டு முழுவதும் செய்யப்படும் அனைத்து பூஜைகளும் இந்த தினங்களில் நடத்தப்பட்டது. இதன் நிறைவாக தீர்த்தவாரி நடைபெற்றது.
தீர்த்தவாரி
இதை முன்னிட்டு கோவிலில் இருந்து லட்சுமணன், சீதாதேவி சமேத கோதண்டராமர் வில்லேந்திய திருக்கோலத்தில் வீதி உலாவாக முக்கிய வீதிகளின் வழியாக வந்து கோவிலின் பின்புறத்தில் உள்ள சரயு புஷ்கரணி தெப்ப குளத்தில் எழுந்தருளினார்.
பின்னர் குளத்தில் தீர்த்தவாரி நடந்தது. இதையொட்டி குளத்தில் தீர்த்த பேரருக்கு பால், தயிர், மஞ்சள், பஞ்சாமிர்தம், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு விதமான மங்கள பொருட்களை கொண்டு தீட்சிதர்கள் அபிஷேகம் செய்தனர். இதையடுத்து கோவிலில் யாகசாலை பூஜை நடத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.