கோடநாடு பங்களாவை ஆய்வு செய்ய கோரிய மனு தள்ளுபடி

கொலை, கொள்ளை வழக்கில், கோடநாடு பங்களாவை மாவட்ட நீதிபதி ஆய்வு செய்ய கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
ஊட்டி,
கோத்தகிரி அருகே கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 24.4.2017 அன்று காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். மேலும் எஸ்டேட் பங்களாவில் இருந்த பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டது. இதுதொடர்பாக சயான், வாளையாறு மனோஜ், சந்தோஷ் சாமி, தீபு, சதீசன், உதயகுமார், ஜித்தின் ஜாய், ஜம்சீர் அலி, மனோஜ் சாமி, குட்டி என்ற பிஜின் ஆகிய 10 பேரை கோத்தகிரி போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய டிரைவர் கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்தார்.
இந்த வழக்கு விசாரணை நீலகிரி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதையடுத்து தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னர் மேற்கு மண்டல ஐ.ஜி. தலைமையில் 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை துரிதப்படுத்தப்பட்டது. அப்போது வழக்கில் தடயங்களை அழித்ததாக கனகராஜின் சகோதரர் தனபால், உறவினர் ரமேஷ் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தனிப்படை போலீசார் 316 பேரிடம் மறுவிசாரணை நடத்தினர்.
இதைத்தொடர்ந்து கோடநாடு வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டது. கோவை சி.பி.சி.ஐ.டி. கூடுதல் துணை கமிஷனர் முருகவேல் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டு, தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு கட்டங்களாக வழக்கில் தொடர்புடையவர்களுக்கு சம்மன் அனுப்பி சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. வாளையாறு மனோஜ் ஆஜரானார். கோடநாடு பங்களாவில் தடயங்கள் அழிக்கப்பட்டு உள்ளதால், வழக்கை விசாரித்து வரும் மாவட்ட நீதிபதி மற்றும் எதிர்தரப்பு வக்கீல்கள் கோடநாடு பங்களாவை ஆய்வு செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கூறி ஜித்தின் ஜாய் தரப்பில் கடந்த ஏப்ரல் மாதம் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த மனுவை தள்ளுபடி செய்தும், வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 19-ந் தேதிக்கு ஒத்திவைத்தும் நீதிபதி முரளிதரன் உத்தரவிட்டார்.






