பெட்ரோல், டீசல் விலை உயர்வு வளர்ச்சிக்கான அறிகுறி அல்ல டாக்டர் ராமதாஸ் குற்றச்சாட்டு

பெட்ரோல், டீசல் விலை உயர்வு நாட்டின் வளர்ச்சிக்கான அறிகுறி அல்ல என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு வளர்ச்சிக்கான அறிகுறி அல்ல டாக்டர் ராமதாஸ் குற்றச்சாட்டு
Published on

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பெட்ரோல், டீசல் விலைகள் தொடர்ந்து 6-வது நாளாக உயர்த்தப்பட்டுள்ளன. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 13 காசுகள் உயர்ந்து ரூ.81.35 ஆகவும், டீசல் விலை 19 காசுகள் உயர்ந்து ரூ.73.88 ஆகவும் அதிகரித்துள்ளன. இதன் மூலம் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் இதுவரை இல்லாத அளவுக்கு புதிய வரலாற்று உச்சத்தை தொட்டுள்ளன. இது நாட்டின் வளர்ச்சிக்கான அறிகுறி அல்ல.

பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்த முடியாதா? என்று கேட்டால் கண்டிப்பாக முடியும் என்பது தான் பதிலாக இருக்கும். ஆனால், மத்திய, மாநில அரசுகள் தங்களின் ஒட்டுமொத்த வரி வருவாயில் பெரும்பகுதியை எரிபொருட்கள் மூலம் திரட்டத் துடிப்பது தான் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மீது தாங்க முடியாத சுமையை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால், இதுகுறித்து அரசுகள் கவலைப்படவில்லை.

மத்திய அரசும், மாநில அரசுகளும் எரிபொருட்களை வருவாய் ஈட்டித் தரும் பொருட்களாக மட்டுமே பார்ப்பதால் வரியைக் குறைக்க மறுக்கின்றன. நாட்டின் உற்பத்திக்கும், அதன்மூலமாக பொருளாதார வளர்ச்சிக்கு மிகப்பெரிய ஊக்கியாக திகழ்வது பெட்ரோல், டீசல் தான் என்பதை அரசுகள் உணர மறுக்கின்றன.

மோட்டார் வாகனப் போக்குவரத்தில் தொடங்கி தொழிற்சாலைகள் வரை அனைத்துக்கும் எரிபொருட்கள் தான் முக்கிய ஆதாரம் ஆகும். பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக வாகனங்கள் முதல் தொழிற்சாலைகள் வரை அனைத்தின் இயக்கச் செலவுகளும் அதிகரிக்கும்; அதன் காரணமாக உற்பத்திப் பொருட்களின் விலைகள் உயரும். இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் அதிகரிக்கும்; பொருளாதார வளர்ச்சிக் குறையும். இதனால் கடுமையாக பாதிக்கப்படுவது மக்கள் தான். எனவே, வரி வருவாய் என்ற குறுகியப்பார்வையில் இந்த விலை விவகாரத்தை அணுகக்கூடாது. மாறாக பொருளாதார வளர்ச்சி சார்ந்த தொலைநோக்குப்பார்வையுடன் இதை அரசு அணுக வேண்டும். உடனடியாக வரிகளைக்குறைத்து பெட்ரோல், டீசல் விலைகள் குறைவதை உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com