பழனிக்கு படையெடுக்கும் பாதயாத்திரை பக்தர்கள்

தைப்பூச திருவிழாவையொட்டி, பழனிக்கு பாதயாத்திரை பக்தர்கள் படையெடுத்து வருகின்றனர். அலகுகுத்தி, காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
பழனிக்கு படையெடுக்கும் பாதயாத்திரை பக்தர்கள்
Published on

தைப்பூச திருவிழா

பழனியில், முருகப்பெருமானின் 3-ம் படைவீடு அமைந்துள்ளது. இங்கு தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழாக்கள் ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த திருவிழாக்களின்போது லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து முருகப்பெருமானை வேண்டி செல்கின்றனர். அதேபோல் ஏரளாளமான பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் வந்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

இந்நிலையில் பழனி முருகன் கோவிலில் கடந்த 27-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர். அதைத்தொடர்ந்து 29-ந்தேதி தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் விழாவில் தினமும் மாலையில் முத்துக்குமாரசுவாமி வள்ளி-தெய்வானையுடன் வெள்ளி ஆட்டுக்கிடா, வெள்ளி காமதேனு, வெள்ளி யானை, பெரிய தங்கமயில் வாகனம் மற்றும் தங்கக்குதிரை வாகனத்தில் வீதி உலா வருகிறார்.

படையெடுக்கும் பக்தர்கள்

தைப்பூச திருவிழாவை முன்னிட்டு ஒரு மாதத்துக்கு முன்பே பழனிக்கு பாதயாத்திரை பக்தர்கள் வருவது வழக்கம். அதன்படி கடந்த ஜனவரி மாத தொடக்கத்திலேயே பாதயாத்திரையாக பக்தர்கள் பழனிக்கு வர தொடங்கினர். இந்நிலையில் நாளை மறுநாள் (சனிக்கிழமை) தைப்பூசம் என்பதால் அன்றைய தினம் முருகப்பெருமானை தரிசிக்க பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பழனி நோக்கி பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர்.

குறிப்பாக திண்டுக்கல் சாலை, தாராபுரம் சாலை, உடுமலை சாலை என அனைத்து பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வருகின்றனர். இதில் காவடி குழுவினரும் மயில் காவடி எடுத்து ஆடியும், ஒயிலாட்டம், கோலாட்டம் ஆடியும் வருகின்றனர். இந்நிலையில் நேற்று நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் பகுதியை சேர்ந்த பக்தர்கள் மயில் காவடி எடுத்தும், அலகு குத்தியும் வந்தனர். பின்னர் மாலையில் ராட்சத கிரேன் மூலம் 2 பறவை காவடியில் 14 பக்தர்கள் ஆடி வந்தனர். திருஆவினன்குடி பகுதியில் இருந்து பூங்காரோடு வழியே சென்று கிரிவீதிகளில் வலம் வந்தனர். பின்னர் மலைக்கோவிலுக்கு சென்று வழிபட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com