முஸ்லிம்கள் மீது போலீஸ் தடியடி: அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்

வண்ணாரப்பேட்டையில் முஸ்லிம்கள் நடத்திய போராட்டத்தின்போது போலீசார் தடியடி நடத்தியதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
முஸ்லிம்கள் மீது போலீஸ் தடியடி: அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்
Published on

சென்னை,

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக சென்னை வண்ணாரப்பேட்டையில் நேற்று முன்தினம் முஸ்லிம்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின்போது போலீசார் தடியடி நடத்தினர். இந்த சம்பவத்துக்கு மு.க.ஸ்டாலின் உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்

சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியில் குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக ஜனநாயக ரீதியாக போராடியவர்களை வேண்டுமென்றே தடியடி செய்து கலைத்து, போராட்டத்தை வன்முறை பாதைக்கு திருப்பி, அதனை வன்முறை போராட்டமாக சித்தரிக்க திட்டமிட்டு செயல்பட்டுள்ளது காவல்துறை.

காவல்துறையின் இந்த சதிச்செயல் தமிழகம் முழுவதும் காட்டு தீ போல பரவி, சென்னை முழுவதும் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் பல்வேறு நகரங்களில் பொதுமக்களை சாலைக்கு வந்து ஆர்ப்பாட்டம், மறியல் போராட்டங்கள் நடத்தும் கொந்தளிப்பான சூழ்நிலையை ஏற்படுத்தியது. இதனால் பிப்ரவரி 14-ந்தேதி இரவு கருப்பு இரவு என்று சொல்லத்தக்க வகையில் மாறிவிட்டது.

ஜனநாயகத்தை தானும் காப்பாற்றாமல், ஜனநாயக வழியில் போராடும் மக்களையும் ஆவேசமாக அடித்து விரட்டும் அராஜக ஆட்சியாக எடப்பாடி பழனிசாமி ஆட்சி மாறிவருவதன் அடையாளம் தான் வண்ணாரப்பேட்டை நிகழ்வு. அமைதி வழியில் போராடியவர்கள் மீது, தடியடி நடத்திய காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். கைது செய்யப்பட்ட அனைவரும் உடனே விடுதலை செய்யப்படுவது மட்டுமல்ல, அவர்கள் மீதான வழக்குகளும் திரும்பப்பெறப்பட வேண்டும். அனைத்துக்கும் மேலாக, மக்கள் குரலே மகேசன் குரல் என்பதை உணர்ந்து மக்களை உரிய முறையில் மதித்து, கண்ணியத்துடன் நடத்த கற்றுக்கொண்டு, ஜனநாயக போராட்டங்களை ஏற்று அங்கீகரிக்கும் பழக்கத்தையும் தமிழக அரசு கடைப்பிடிக்கவேண்டும்.

தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி

பிரச்சினைகளுக்கு வன்முறை தீர்வாகாது. சென்னை வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற வன்முறைக்கும், எங்களுக்கும் சம்பந்தமில்லை என்றும், எங்களுடைய போராட்டம் மக்கள் மனதில் நல்ல எண்ணத்தை ஏற்படுத்த வேண்டுமே தவிர வன்முறையை தூண்டவேண்டும் என்பது நோக்கம் அல்ல என்றும் போராட்டக்காரர்கள் தெரிவித்து உள்ளனர்.

அவர்களின் கூற்றை ஆராய்ந்து பார்க்கும்போது வன்முறைக்கு காரணம் அரசாங்கமாக இருக்க வேண்டும். இல்லை பா.ஜனதாவாகத்தான் இருக்க வேண்டும். இவர்கள்தான் மறைவில் இருந்து தாக்கியதாகவும், அதன் அடிப்படையில் தடியடி நடந்ததாகவும் சொல்கின்றனர்.

போராட்டக்காரர்களுக்கு அரசு பாதுகாப்பு அளிக்க வேண்டும். இதில் அரசும், போலீசும் சிறு தவறு செய்துள்ளது. இதை திருத்திக்கொள்ள வேண்டும்.

அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன்

சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக அமைதி வழியில் போராடிய முஸ்லிம்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தி இருப்பது கடும் கண்டனத்திற்குரியது. மக்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு, போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் அனைத்தையும் திரும்பப்பெறவேண்டும். எதிர்காலத்தில் இத்தகைய சம்பவங்கள் நிகழாமல் பொறுப்போடு நடந்து கொள்ளவேண்டிய கடமை காவல்துறையினருக்கு இருக்கிறது என்பதை அவர்கள் மறந்து விடக்கூடாது.

குடியுரிமை சட்ட திருத்தத்தை திரும்ப பெறக்கோரி ஜனநாயக வழியில் போராடும் முஸ்லிம்களுக்கு எப்போதும் அ.ம.மு.க. துணையாக நிற்கும்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்

சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து அமைதியாக ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் மீது காவல்துறை கண்மூடித்தனமாக தடியடி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த அராஜக தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன். போலீஸ் தடியடியை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

13 மாநிலங்கள் குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்தமாட்டோம் என தெரிவித்துள்ளனர். கேரளா, புதுச்சேரி, பஞ்சாப், மேற்கு வங்காளம் ஆகிய மாநில அரசுகள் குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என தீர்மானம் நிறைவேற்றியுள்ளன. இதேபோல் தமிழக அரசும் நடைபெறும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தீர்மானம் நிறைவேற்றவேண்டும்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன்

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி சென்னை வண்ணாரப்பேட்டையில் முஸ்லிம்கள் அறவழியில் கூடி போராட்டம் நடத்தியுள்ளனர். இதனை சகித்துக்கொள்ளமுடியாமல் அவர்கள் மீது காவல்துறை வன்முறையை ஏவி இருக்கிறது.

அந்த நெரிசலில் சிக்கி முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அமைதியாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வன்முறை தாக்குதல்களை நடத்தி ஒரு உயிரிழப்புக்கு காரணமான காவல்துறை அதிகாரிகள் மீது கொலை வழக்குப்பதிவு செய்யவேண்டும். இந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தேசிய மக்கள் தொகை பதிவேடு நடவடிக்கையை மேற்கொள்ளமாட்டோம் என்று முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிக்கவேண்டும்.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்

சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக போராடியவர்கள் மீது காட்டுமிராண்டித்தனமாக காவல்துறையினர் கோரத்தாக்குதல் தொடுத்திருப்பது பேரதிர்ச்சியை தருகிறது. தங்களது உரிமைக்காக அறவழியில் போராடுவதும், அரசின் சட்டங்கள் குறித்து மாற்று கருத்து தெரிவிப்பதும் அடிப்படை ஜனநாயக உரிமை.

ஆகவே குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக போராடியவர்கள் மீது தாக்குதல் தொடுத்த காவல்துறையினர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவேண்டும். போராடுவோர் மீதான அடக்குமுறைகள் கைவிடப்பட்டு, அறவழியில் போராடுவதற்கு அனுமதிக்கப்படவேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com