பொங்கல் பண்டிகை: 1½ கோடி குடும்பத்துக்கு இலவச வேட்டி, சேலை - எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்

பொங்கல் பண்டிகையையொட்டி 1½ கோடி குடும்பத்துக்கு இலவச வேட்டி-சேலை வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
பொங்கல் பண்டிகை: 1½ கோடி குடும்பத்துக்கு இலவச வேட்டி, சேலை - எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்
Published on

சென்னை,

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் தமிழர் திருநாளான பொங்கல் திருநாளையொட்டி விலையில்லா வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இத்திட்டத்தின் மூலம் ஏழை, எளிய மக்கள் பயன்பெறுவதோடு மட்டுமல்லாமல், கைத்தறி, விசைத்தறி தொழில்களில் ஈடுபட்டுள்ளோருக்கு வேலை வாய்ப்பும் வழங்கப்படுகிறது.

2019-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி விலையில்லா வேட்டி சேலை வழங்கும் திட்டத்தின் கீழ், 484 கோடியே 25 லட்சம் ரூபாய் செலவில் 1 கோடியே 56 லட்சத்து 54 ஆயிரம் சேலைகளும், 1 கோடியே 56 லட்சத்து 44 ஆயிரம் வேட்டிகளும் வழங்கப்படுகிறது.

இதை பயனாளிகளுக்கு வழங்கிடும் அடையாளமாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று 5 குடும்பங்களுக்கு விலையில்லா வேட்டி சேலைகளை வழங்கி திட்டத்தினை துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஓ.எஸ்.மணியன், ஆர்.பி.உதயகுமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பொதுப்பணித் துறையின் கீழ்செயல்படும் நீர்வள ஆதாரத் துறை மற்றும் கட்டிட அமைப்பில் காலியாக உள்ள 91 உதவிப் பொறியாளர் (சிவில்) மற்றும் 40 உதவிப் பொறியாளர் (பணி) இடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக தெரிவு செய்யப்பட்ட 131 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 7 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

அரியலூரில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் 4 கோடியே 23 லட்சத்து 82 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 15 வகுப்பறைகள், 1 ஆங்கில மொழி ஆய்வகம், 4 ஆய்வகத் தொகுப்பு மற்றும் கழிவறை கட்டிடங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.

மேலும் பாரதியார் பல்கலைக்கழகத்தில் 5 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டிடங்கள் கரூர் அரசு கலைக்கல்லூரியில் 1 கோடியே 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 9 பொன்விழா நினைவு வகுப்பறைக் கட்டிடங்கள், காரிமங்கலத்தில் உள்ள அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 1 கோடியே 65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 10 வகுப்பறைக் கட்டிடங்கள், செய்யாறில் உள்ள அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 1 கோடியே 37 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 5 வகுப்பறைக் கட்டிடங்கள் மற்றும் ஆய்வகக் கட்டிடம், சைதாப்பேட்டையில் உள்ள அரசு கல்வியியல் மேம்பாட்டு நிறுவனத்தில் 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 4 வகுப்பறைக் கட்டிடங்கள், சென்னை, பாரதி மகளிர் கல்லூரியில் 87 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 2 வகுப்பறைகள் மற்றும் பல்நோக்குக்கூடம், சென்னை, காயிதே மில்லத் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் 1 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 4 வகுப்பறைக் கட்டடங்கள், பல் நோக்குக்கூடம், மேம்படுத்தப்பட்ட ஆய்வகம் மற்றும் நூலகக் கட்டிடங்கள், செங்கல்பட்டில் உள்ள ராஜேஸ்வரி வேதாச்சலம் அரசு கலைக் கல்லூரியில் 1 கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில்கட்டப்பட்டுள்ள 8 வகுப்பறைகள் மற்றும் கழிவறைகட்டிடங்கள் உள்பட என மொத்தம் 25 கோடியே 24 லட்சத்து 37 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உயர் கல்வித்துறை கட்டிடங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் கே.பி.அன்பழகன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com