மு.க.ஸ்டாலினுக்கும் பாராட்டு: முதல்-அமைச்சரின் செயல்பாடுகள் அரசை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்லும் - சட்டசபையில் சபாநாயகர் ப.தனபால் பேச்சு

முதல்-அமைச்சரின் செயல்பாடு, இந்த அரசை நிச்சயம் வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்லும் என்று சட்டசபையில் சபாநாயகர் ப.தனபால் பேசினார். எதிர்க்கட்சி தலைவரான மு.க.ஸ்டாலினுக்கும் பாராட்டு தெரிவித்தார். தமிழக சட்டசபை கூட்டத் தொடரின் இறுதி நாளான நேற்று சபாநாயகர் ப.தனபால் ஆற்றிய உரை வருமாறு:-
மு.க.ஸ்டாலினுக்கும் பாராட்டு: முதல்-அமைச்சரின் செயல்பாடுகள் அரசை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்லும் - சட்டசபையில் சபாநாயகர் ப.தனபால் பேச்சு
Published on

சென்னை,

நான் 9 ஆண்டுகள் சபாநாயகர் பதவியில் இருந்திருக்கிறேன். இந்த சட்டசபை 2016-ம் ஆண்டு மே 25-ந் தேதி தொடங்கி, 27-ந் தேதி (நேற்று) நிறைவடைகிறது. இதுவரை 10 கூட்டத் தொடர்கள் நடைபெற்று, 167 நாட்கள் சட்டசபை கூடியது. அந்த வகையில் 858 மணிநேரம் சட்டசபை நடைபெற்றுள்ளது.

இந்த ஆண்டில் கவர்னர் உரை, இடைக்கால பட்ஜெட் ஆகியவற்றை எதிர்க்கட்சியினர் புறக்கணித்த போதிலும், மற்ற நாட்களில் ஆளும் கட்சியினரைவிட எதிர்க்கட்சியினருக்கு பேச கூடுதல் நேரம் வழங்கப்பட்டுள்ளது. ஜனநாயக முறைப்படி அரசு செயல்படுகிறது என்பதற்கு இது சான்று.

முதல்-அமைச்சர் தனது துறைகள் தொடர்பாக சட்டசபையில் பதிலளித்த நேரம் 9 மணி 16 நிமிடங்கள் ஆகும். மற்ற துறைகள் தொடர்பாகவும், சட்டசபையில் எம்.எல்.ஏ.க்களின் கருத்துகளுக்கு பதிலளிக்கவும், 362 முறை குறுக்கிட்டு 6 மணி 16 நிமிடங்கள் பதிலளித்துள்ளார்.

கடந்த 5 ஆண்டுகளில் எம்.எல்.ஏ.க்களிடம் இருந்து சட்டசபையில் எழுப்புவதற்காக 1 லட்சத்து 30 ஆயிரத்து 572 கேள்விகள் வரப்பெற்றன. அவற்றில் 82 ஆயிரத்து 506 கேள்விகள் அனுமதிக்கப்பட்டன. அதிக அளவாக 103 கேள்விகளுக்கு அமைச்சர் தங்கமணி பதிலளித்துள்ளார்.

39 சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானங்கள் எடுத்துக் கொள்ளப்பட்டன. அவற்றில் 12 தீர்மானங்களுக்கு முதல்-அமைச்சர் பதிலளித்தார். இவைதவிர அவ்வப்போது 245 முக்கிய பிரச்சினைகள் அவையில் எழுப்பப்பட்டன. அவற்றில் 60 பிரச்சினைகளுக்கு முதல்-அமைச்சர் பதிலளித்தார்.

210 சட்ட மசோதாக்கள் அவையில் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றில் 205 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. 7 அரசினர் தனித் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அவையின் 110-ம் விதியின் கீழ் 177 அறிக்கைகளை முதல்-அமைச்சர் படித்தார்.

இந்த 5 ஆண்டுகளில் சட்டசபைக்கு 18 எம்.எல்.ஏ.க்கள் நாள் தவறாமல் வந்துள்ளனர். முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் ஆகியோர் அனைத்து நாட்களிலும் அவைக்கு வந்து, கூட்டம் தொடங்கி முடிவும்வரை பங்காற்றியுள்ளனர்.

சட்டசபையில் 89 ஆயிரத்து 731 பேர் பார்வையாளர்களாக வந்துள்ளனர். அவர்களில் 13 ஆயிரத்து 179 பேர் பெண்கள். சட்டசபையின் வரலாற்றிலேயே முதல் முறையாக 5 தலைவர்களின், அதாவது ஜெயலலிதா, ராமசாமி படையாச்சியார், வ.உ.சிதம்பரனார், பி.சுப்பராயன், ஓ.பி.ராமசாமி ரெட்டியார் ஆகியோரின் உருவப்படங்கள் திறந்து வைக்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது.

ஒரு அரசை தேர்தலில் வெற்றி பெறச் செய்வது அந்த அரசின் செயல்பாடுதான். அதுபோல முதல்-அமைச்சரின் செயல்பாடு, இந்த அரசை நிச்சயம் வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்லும்.

2017-ம் ஆண்டு பிப்ரவரி 18-ந் தேதி அவையில் நடந்த சில விரும்பத் தகாத சம்பவங்களை என்னால் மறக்க முடியாது. ஆனால அவற்றை நான் மன்னித்துவிட்டேன். என்னை பதவியில் இருந்து நீக்குவதற்கும் தனித்தீர்மானம் கொண்டு வரப்பட்டு, தோல்வியடைந்தது.

தவறான புரிதல் காரணமாக இருந்தாலும் அதற்காக எனது வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். பேரவை புறக்கணிப்புகள், சபாநாயகருக்கு எதிரான முழக்கங்கள் போன்றவை எல்லாம் அரசியல் காரணமாகத்தானே தவிர தனிப்பட்ட முறையில் அல்ல.

பாராட்ட வேண்டியவற்றை பாராட்டியும், குறை கூற வேண்டிய நேரத்தில் சுட்டிக்காட்டியும் எதிர்க்கட்சித் தலைவர் சிறப்பாக பணியாற்றியுள்ளார். அவருக்கும், அனுபவம் வாய்ந்த எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராமசாமி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் எம்.எல்.ஏ. முகமது அபூபக்கர், எள் என்றால் எண்ணையாக பணியாற்றும் சட்டசபை செயலாளர் கி.சீனிவாசன் ஆகியோருக்கு நன்றி.

முதல்-அமைச்சர் செல்லும் இடமெல்லாம் ஆங்கிலத்தில் வி (விக்டரி - வெற்றி) என்ற விரல் குறியீட்டைக் காட்டி பிரசாரம் செய்கிறார். அவர் நினைத்தது நிறைவேறும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com