நெல்லை, கும்பகோணத்தை தொடர்ந்து மதுரையிலும் அதிமுக கூட்டத்தில் தள்ளுமுள்ளு

முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் முன்னிலையில் நிர்வாகிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை, கும்பகோணத்தை தொடர்ந்து மதுரையிலும் அதிமுக கூட்டத்தில் தள்ளுமுள்ளு
Published on

மதுரை,

அதிமுகவில் கட்சி அமைப்புகளின் பணிகள், செயல்பாடுகள் குறித்து நேரடியாக கள ஆய்வு செய்து, அவற்றின் பணிகளை மேம்படுத்துவது தொடர்பாக கருத்துகளை வழங்க கள ஆய்வுக் குழுவை அமைத்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டிருந்தார். அதன்படி, 10 முன்னாள் அமைச்சர்கள் அடங்கிய இந்தக் குழுவினர், மாவட்டம் தோறும் சென்று கட்சிப் பணிகள் தொடர்பான கள ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில்,மதுரை திருப்பரங்குன்றத்தில் அதிமுக மாநகர் மாவட்ட கழகம் சார்பில் மதுரையில் உள்ள மத்திய தொகுதி, மேற்கு, வடக்கு, மற்றும் தெற்கு என நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கான கள ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்நிலையில் மதுரையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் தள்ளு முள்ளு ஏற்பட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், செம்மலை, செல்லூர் ராஜு ஆகியோரின் முன்னிலையில் கட்சி நிர்வாகிகள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சில அதிமுக நிர்வாகிகள் முன்னாள் அமைச்சர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் ஒரு தரப்பு அதிமுக நிர்வாகிகளை மற்றொரு தரப்பினர் தாக்கி கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பூத் நிர்வாகிகள் நியமனம், அடையாள அட்டை வழங்குவது பற்றி நிர்வாகிகளுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து பேட்டி அளித்த முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், செம்மலை ஆகியோர்,

எந்த மோதலும் இல்லை. அதிமுகவில் பிரச்சினை இருப்பது போல பூதாகரமாக்க முயல்கின்றனர். அதிமுகவில் எந்த சலசலப்பு இல்லை. கட்சியினரிடம் பணி புரிவதில் போட்டி உள்ளது. அவ்வளவு தான். கட்சியினர் பேசுவதற்கு அனுமதி கேட்டனர், அதை தருவதாக சொன்னோம். பிரச்சினை முடிந்து விட்டது. அதற்குள் சிலர் எழுப்பிய சத்தத்தை பெரிதாக்கிவிட்டனர் என்றனர்.

நெல்லை மற்றும் கும்பகோணத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடந்த அதிமுக கள ஆய்வுக் கூட்டத்தில் இரு பிரிவினருக்கிடையே மோதிக்கொண்டது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இன்று மதுரையில் நடந்த அதிமுக ஆய்வு குழு கூட்டத்திலும் இரு பிரிவினருக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது அதிமுக நிர்வாகிகளிடையே மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com