திருவண்ணாமலை: ரேபிஸ் தொற்று பாதிப்பால் விவசாயி உயிரிழப்பு

திவண்ணாமலையில் நடப்பு ஆண்டு 10 ஆயிரத்து 479 நாய்கடி சம்பவங்கள் நடைபெற்றுள்ளன
திருவண்ணாமலை அடுத்த புது சாணிப்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜான் ஆண்ட்ரூஸ் (48). அவரை கடந்த சில மாதங்களுக்கு முன்பு தெருநாய் ஒன்று கடித்தது.
ஆனால், தெருநாய் கடித்தது தொடர்பாக அவர் எவ்வித முதலுதவியும், மருத்துவ சிகிச்சையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார்.
இதனிடையே, ஜான் ஆண்ட்ரூசின் உடலில் சில மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. இதை உணர்ந்த அவர் கடந்த 8-ம் தேதி கொளக்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சென்றுள்ளார். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவருக்கு ரேபிஸ் நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், ரேபிஸ் தொற்று பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வந்த விவசாயி ஜான் ஆண்ட்ரூஸ் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
திவண்ணாமலையில் நடப்பு ஆண்டு 10 ஆயிரத்து 479 நாய்கடி சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாகவும், இதில் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.






