பேசின்பிரிட்ஜ் பகுதியில் தண்டவாளத்தில் மழைநீர் தேக்கம்: எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ஆவடி, திருவள்ளூரில் நிறுத்தம் - பயணிகள் அவதி

பேசின்பிரிட்ஜ் பகுதியில் தண்டவாளத்தில் மழைநீர் தேங்கி நின்றதால் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ஆவடி, திருவள்ளூரில் நிறுத்தப்பட்டு அங்கிருந்து இயக்கப்பட்டன. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள்.
பேசின்பிரிட்ஜ் பகுதியில் தண்டவாளத்தில் மழைநீர் தேக்கம்: எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ஆவடி, திருவள்ளூரில் நிறுத்தம் - பயணிகள் அவதி
Published on

சென்னை மற்றும் புறநகர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு முதல் அதிகாலை வரையில் கனமழை பெய்தது. இதனால் நகரின் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியது. சென்னை பேசின்பிரிட்ஜ் அருகே கூவம் ஆற்றுப்பகுதியில் உள்ள மேம்பாலத்தில் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றது.

இந்த பாலத்தில் அமைந்துள்ள எக்ஸ்பிரஸ் ரெயில்கள் செல்லும் தண்டவாளத்தில் நேற்று மழைநீர் குளம்போல் தேங்கியது. இதனால் சிக்னல் கோளாறும் ஏற்பட்டது. இதன் காரணமாக சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு வரவேண்டிய ரெயில்களும், இங்கிருந்து புறப்பட வேண்டிய சில ரெயில்களின் சேவைகள் பாதிக்கப்பட்டன. இதனால் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன.

அதன்படி சென்டிரல்-ஜோலார்பேட்டை இடையேயான ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று ரத்து செய்யப்பட்டது. இதேபோல சென்னை நோக்கி வந்த சென்டிரல்-கே.எஸ்.ஆர். பெங்களூரு லால்பாக், சென்னை சென்டிரல்-மைசூர் அதிவிரைவு ரெயில், சென்டிரல்-கோவை இன்டர்சிட்டி ரெயில் ஆகியவை ஆவடியில் நிறுத்தப்பட்டு, பின்னர் அங்கிருந்தே இயக்கப்பட்டன.

அதேபோல சென்டிரல்-திருப்பதி எக்ஸ்பிரஸ் ரெயில், சென்டிரல்-மும்பை சி.எஸ்.டி., ரெயில் ஆகியவை திருவள்ளூரில் நிறுத்தப்பட்டு, அங்கிருந்து இயக்கப்பட்டன. மேலும் சென்டிரல் - கோவை இடையிலான வந்தே பாரத் ரெயில், சென்டிரலுக்கு பதிலாக சென்னை கடற்கரைக்கு திருப்பி விடப்பட்டது.

இதனால் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் பயணம் செய்த முதியோர்கள், குழந்தைகள் உள்ளிட்ட பயணிகள் ஆவடி மற்றும் திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் இறங்கி பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு புறநகர் மின்சார ரெயில்களில் ஏறி சென்றனர். இதனால் மின்சார ரயில்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது.

மேலும் சில பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயிலை விட்டு இறங்கி மாநகர பஸ்களிலும், ஆட்டோக்களிலும் சென்றனர். நேற்று இரவு வரை எக்ஸ்பிரஸ் ரெயில்கள் தொடர் மழையால் சென்னை சென்டிரலுக்கு இயக்கப்படவில்லை.

மாற்றுப்பாதையில் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்படுவது குறித்து முன்பதிவு செய்த பயணிகளுக்கு செல்போனில் குறுந்தகவல் அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com