சைக்கிளில் இரவு ரோந்துபணி சென்று அசத்திய இணை கமிஷனர் ரம்யாபாரதி

வட சென்னையில் ரவுடிகளை அடக்கி ஒடுக்குவதில் தீவிரம் காட்டும் விதமாக வடசென்னை இணை கமிஷனர் ரம்யா பாரதி சைக்கிளில் இரவு ரோந்துப்பணி சென்று அசத்தலில் ஈடுபட்டார்.
சைக்கிளில் இரவு ரோந்துபணி சென்று அசத்திய இணை கமிஷனர் ரம்யாபாரதி
Published on

சென்னை,

வடசென்னை இணை கமிஷனராக மிகவும் துடிப்பாக, துணிச்சலாக பணியாற்றுகிறார் ரம்யாபாரதி. வட சென்னையில் போதைப்பொருளை ஒழிப்பதிலும், ரவுடிகளை அடக்கி ஒடுக்குவதிலும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார். இந்த நிலையில், இரவு நேரத்தில் வட சென்னையில் போலீசின் இரவு நேர ரோந்துக்களம் எப்படி இருக்கிறது, என்பதை நேரில் பார்வையிட விரும்பினார்.பொதுமக்கள் அசந்து தூங்கும் இரவு 2 மணி முதல் அதிகாலை 5 மணி வரையிலான நேரத்தில் அதிக குற்றங்கள் நடக்கும் என்பதால் இணை கமிஷனர் ரம்யாபாரதி போலீஸ் சீருடையில் இல்லாமல் சாதாரண உடையில் அதிகாலை 2.45 மணிக்கு சைக்கிளில் ரோந்து பணியை தொடங்கினார்.

பாதுகாவலரை தனக்கு பின்னால் சற்று தொலைவில் சைக்கிளில் வரும்படி உத்தரவிட்டார். தனக்கு சற்று முன்னால் சைக்கிளில் சென்று வழிகாட்டும்படி உளவுப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டருக்கு ஆணையிட்டார்.

9 கிலோ மீட்டர் தூரம்

கிட்டத்தட்ட 1 மணி நேரம், 9 கிலோ மீட்டர் தூரம் அவரது சைக்கிள் ரோந்துபணி வடசென்னை தெருக்களில் களைகட்டியது. கோட்டை போலீஸ் எல்லையில், வாலாஜா பாயிண்ட், முத்துசாமி பாலம், முத்துசாமி சாலை, எஸ்பிளனேடு போலீஸ் நிலைய எல்லையில், ராஜாஅண்ணாமலை மன்றம் சந்திப்பு, குறளகம் சந்திப்பு, பூக்கடை போலீஸ் எல்லைக்குள் என்.எஸ்.சி.போஸ் சாலை வழியாக சைக்கிள் சென்றது. அடுத்து யானைக்கவுனி போலீஸ் எல்லைக்குள் நுழைந்து, ஆர்.கே.நகர், புதுவண்ணாரப்பேட்டை போலீஸ் நிலைய எல்லைகளில் எண்ணூர் நெடுஞ்சாலை வழியாக சென்று, இறுதியாக தண்டையார்பேட்டை போலீஸ் எல்லைக்குள் நுழைந்தது. அதிகாலை 4 மணியளவில் திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் தனது சைக்கிள் ரோந்து பணியை முடித்தார்.

போலீஸ் நிலையங்களில் ஆய்வு

வழியில் ஆர்.கே.நகர், தண்டையார்பேட்டை போலீஸ் நிலையங்களுக்கு சென்று ஆய்வு செய்தார். வழி நெடுக போலீசார் ரோந்து வாகனங்களில் தூங்குகிறார்களா, அல்லது விழிப்போடு பணியாற்றுகிறார்களா, என்பதையும் பார்வையிட்டார்.

இந்த சைக்கிள் ரோந்து பணி குறித்து இணை கமிஷனர் ரம்யாபாரதி கூறியதாவது:-

நான் சென்ற இடங்களில் எல்லாம் போலீசார் விழிப்போடு பணியாற்றியபடி இருந்தனர். ஒரு சில இளைஞர்கள் போதையில் தள்ளாடியபடி சென்றனர். சந்தேக நபர்கள் இருவரை பிடித்து உரிய விசாரணை நடத்தும்படி போலீஸ் நிலையங்களில் ஒப்படைத்தேன். எனது சைக்கிள் ரோந்து பயணத்தை அடிப்படையாக வைத்து இரவு ரோந்து பணியில் புதிய யுக்தியை செயல்படுத்த முடிவு செய்துள்ளேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com