

சின்னமனூர் அருகே எரசக்கநாயக்கனூரை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 19). இவர் கடந்த 2-ந்தேதி ஒரு பள்ளி வளாகத்தில் உள்ள அங்கன்வாடி மையத்துக்கு சென்ற 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். அப்போது அந்த சிறுமி சத்தம் போட்டார். இதனால், விஜயகுமார் அந்த சிறுமியை கொலை செய்யும் நோக்கத்தில் அவருடைய ஆடையில் தீ வைத்தார். இதில் சிறுமி பலத்த தீக்காயம் அடைந்தார். பாதிக்கப்பட்ட சிறுமி தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக சின்னமனூர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விஜயகுமாரை கைது செய்தனர். இந்த வழக்கு தேனி மாவட்ட மகளிர் கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்பதற்காக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே உத்தரவின்பேரில், கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவின் மீதான விசாரணை நேற்று நடந்தது. நீதிபதி ஈஸ்வரன் விசாரணை நடத்தி ஒரு உத்தரவை பிறப்பித்தார். அதில், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். அதில் ரூ.1 லட்சத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்றும், மீதம் ரூ.2 லட்சத்தை 2 மாத காலத்துக்குள் வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.