பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளிக்க வேண்டும் பிரதமரிடம் கோரிக்கை

தமிழகத்தில் இளநிலை மருத்துவக் கல்வியில் பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்துவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று பிரதமரிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார்.
பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளிக்க வேண்டும் பிரதமரிடம் கோரிக்கை
Published on

சென்னை,

டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் நரேந்திர மோடியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று சந்தித்து, தமிழகத்தின் வளர்ச்சித்திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வை தமிழக அரசு தொடர்ந்து எதிர்த்து வருகிறது. அதில் ஏழை மாணவர்கள் சேர முடியவில்லை என்பதால், நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் அதற்கான உயர் மட்டக் குழுவை அமைத்து ஆய்வு செய்து, அந்தக் குழுவின் பரிந்துரையை அரசு பெற்றது. அந்தப் பரிந்துரைகளை தலைமைச் செயலாளர் தலைமையிலான குழு ஆய்வு செய்து, நீட் தேர்வை விலக்குவதற்கான சட்டத்தை இயற்றலாம் என்று கருத்து தெரிவித்தது.

மருத்துவக் கல்வியில் சேர முடியாமல் இருக்கும் கீழ்த்தட்டு மாணவர்களுக்கும் சமூக நீதியை உறுதி செய்வதற்காக 13.9.2021 அன்று சட்டசபையில் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு 18.9.2021 அன்று கவர்னரிடம் அனுப்பி வைக்கப்பட்டது.

கவர்னர் அதை மறுபரிசீலனைக்காக திருப்பி அனுப்பியதால், கடந்த பிப்ரவரி 8-ந் தேதி மறுபரிசீலனை செய்யப்பட்டு, மீண்டும் அந்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதியின் ஒப்புதலைப் பெறுவதற்காக கவர்னரிடம் அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த நிலையில், தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., ஆயுஷ் ஆகிய மருத்துவக் கல்விகளில் மாணவர் சேர்க்கையை பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் நடத்துவதற்கு அனுமதி வழங்க வேண்டும்.

உக்ரைன் மாணவர்கள் நிலை

ரஷியா - உக்ரைன் போரின்போது அதில் சிக்கிக் கொண்ட ஆயிரக் கணக்கான மாணவர்களை மீட்ட மத்திய அரசை பாராட்டுகிறேன். அதே நேரத்தில் அவர்களின் எதிர்கால படிப்பை நினைக்கும் போது, நிலையற்றதாக இருப்பதை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.

போரின் ஆரம்பகட்டத்தில் 2 ஆயிரம் மாணவர்கள் தமிழகம் திரும்பினர். அவர்களின் கல்வி கேள்விக்குறியாகி எதிர்காலத்தைப் பற்றிய அச்சத்தில் அவர்கள் உள்ளனர்.

அங்குள்ள சூழ்நிலையை பார்த்தால் உக்ரைனுக்கு இந்த மாணவர்கள் மீண்டும் சென்று கல்வியை தொடர முடியாது. போர் நின்றுவிட்டால் கூட இயல்பு நிலைக்கு பல்கலைக்கழகங்கள் திரும்புவதிலும் உறுதியான நிலை எட்டப்படவில்லை.

எனவே உக்ரைனில் எந்த கட்டத்தில் படிப்பை விட்டார்களோ, அதே கட்டத்தில் இருந்து மருத்துவக் கல்வியை இந்தியாவில் அவர்கள் தொடர்ந்து கற்பதற்கான சூழ்நிலையை உருவாக்கும்படி தேசிய மருத்துவ கமிஷன் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சகத்துக்கு உடனடியாக நீங்கள் உத்தரவிட வேண்டும்.

பயிர்க் காப்பீடு

பிரதமரின் வேளாண்மை பயிர் பாதுகாப்புத் திட்டம், கடந்த 2016-ம் ஆண்டு காரீப் பருவத்தில் இருந்து தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதிலிருந்து அந்தத் திட்டத்திற்கான பிரிமியத்திற்கான மானியம், மத்திய மற்றும் தமிழக அரசால் பங்களிக்கப்பட்டு வருகிறது.

ஆனால் 2020-ம் ஆண்டு காரீப் பருவத்திற்குப் பிறகு பிரிமியம் மானியத்தை 25 சதவீதமாக மத்திய அரசு குறைத்தது. எனவே தமிழக அரசு வழங்கி வந்த மானியத் தொகை ரூ.499 கோடியில் இருந்து ரூ.1,950 கோடியாக உயர்ந்து, 2021-22-ம் ஆண்டில் ரூ.2,324 கோடியாக உயர்ந்துவிட்டது.

எனவே மத்திய மற்றும் மாநில அரசின் பங்களிப்பை சமமாக்கி, மத்திய அரசின் பங்களிப்பை முந்தைய நிலைக்கு உயர்த்த வேண்டும். அதுபோல 2020-21-ம் ஆண்டுக்கான ரபீ பருவத்துக்கான பிரிமியம் மானியத்தின் மத்திய அரசின் பங்கை காப்பீட்டு நிறுவனங்களுக்கு வழங்க வேண்டும்.

காலணி ஏற்றுமதி

உலக அளவில் காலணி தொழில் 5.5 சதவீதம் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்திய காலணிச் சந்தையில் அதன் வளர்ச்சி 8 சதவீதமே இருக்கும் என்று எண்ணப்படுகிறது. உலகத்தில் காலணி உற்பத்தியில் 2-ம் இடத்தில் இந்தியா உள்ளது.

காலணி நுகர்வோர் எண்ணிக்கையில் இந்தியா இரண்டாம் இடத்தில் இருந்தாலும், ஏற்றுமதியில் இந்தியா 5-வது இடத்தில் அதாவது உலக அளவிலான ஏற்றுமதியில் 1.9 சதவீத பங்களிப்பை மட்டுமே அளிக்கிறது.

ஆனால் தமிழகம், தேசிய அளவிலான காலணி உற்பத்தியில் 26 சதவீதமும், ஏற்றுமதியில் 45 சதவீதமும் பங்களிப்பை கொண்டுள்ளது. காலணி உற்பத்திக்கான பி.எல்.ஐ. திட்டம், ஏற்றுமதியில் இந்தியாவை இன்னும் உயர்ந்த இடத்திற்கு கொண்டு சென்றுவிடும். அதுபோல உற்பத்திக்குத் தேவையான உப பொருட்கள் இறக்குமதியிலும் பி.எல்.ஐ. திட்டம் ஊக்கம் தரும்.

பாதுகாப்பு தொழில்துறை வழித்தடம்

டி.டி.ஐ.எஸ். திட்டத்தில் தமிழ்நாடு பாதுகாப்பு தொழில்துறை வழித்தடத்திற்கு முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். தமிழ்நாட்டில் 2 பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டி.ஆர்.டி.ஓ.) ஆய்வுக் கூடங்களை அமைக்க வேண்டும்.

சேலம் எக்கு ஆலையில் பயன்படுத்தப்படாமல் உள்ள மிகை நிலத்தை பாதுகாப்பு தொழில் பூங்காவிற்கு வழங்க அனுமதிக்க வேண்டும். இந்த நிலத்தை தமிழக அரசுக்கு வழங்க இந்திய ஸ்டீல் ஆணையத்திற்கு (எஸ்.ஏ.ஐ.எல்.) உத்தரவிட வேண்டும். மப்பேடுவில் மல்டி மாடல் லாஜிஸ்டிக் பார்க் (எம்.எம்.பி.எல்.) வரை ரெயில் பாதை அமைக்க உத்தரவிட வேண்டும்.

தேசிய கல்விக் கொள்கை

மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையில் உள்ள பல்வேறு அம்சங்கள் மீது தமிழக அரசுக்கு கவலைகள் உள்ளன. தமிழகத்தைப் பொறுத்தவரை 1968-ம் ஆண்டில் இருந்து தமிழ், ஆங்கிலம் ஆகிய இருமொழிக் கொள்கைதான் பின்பற்றப்பட்டு வருகிறது.

எனவே சமஸ்கிருதத்தை கட்டாயமாக்குவது மொழி திணிப்பாக மாறி மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். தமிழகம் இருமொழிக் கொள்கையைத்தான் பின்பற்றும். வாழ்க்கைத் தொழில் சார்ந்த கல்வியை 6-ம் வகுப்பில் இருந்து கொண்டு வருவது, இயல்பான கல்வி கற்கும் நிலையை பாதிக்கும்.

இவை உள்பட பல்வேறு காரணங்களுக்காக 2020-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட தேசிய கல்விக் கொள்கையை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்.

ரெயில்வே திட்டங்கள்

சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் முதல் கட்டப் பணிகள் (54.1 கீ.மீ. நீளம்), மத்திய மற்றும் மாநில அரசுகளின் தலா 50 சதவீத பங்களிப்புடன் நிறைவடைந்துள்ளது. அதுபோலவே 2-ம் கட்டப் பணிகளையும் அதே அளவு பங்களிப்புடன் நடைபெறும் வகையில் விரைவாக அங்கீகாரம் கிடைப்பதில் நீங்கள் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த ஆண்டு தமிழகத்தில் இருந்து செல்லும் ஹஜ் பயணிகள், சென்னையில் இருந்து புறப்பட்டுச் செல்வதற்கு வசதி செய்துதர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இரட்டை ரெயில் பாதை

திண்டிவனம் - நகரி இடையே புதிய ரெயில் பாதை (184.45 கி.மீ.), மொரப்பூர் - தர்மபுரி இடையிலான புதிய ரெயில் பாதை (36 கி.மீ.), காட்பாடி - விழுப்புரம் மற்றும் சேலம் - கரூர் - திண்டுக்கல் மற்றும் ஈரோடு - கரூர் இடையே இரட்டை ரெயில் பாதை உருவாக்கம் ஆகிய திட்டங்களை விரைவுபடுத்த தெற்கு ரெயில்வேக்கு உத்தரவிட வேண்டும்.

சின்னசேலம், கள்ளக்குறிச்சி பகுதிகளில் புதிய ரெயில் பாதை அமைப்பதற்காக, விவசாயிகளிடம் இருந்து எடுக்கப்பட்ட நிலத்திற்கான இழப்பீட்டை தமிழக அரசு வழங்கிய நிலையில் மத்திய அரசு தனது பங்களிப்பான ரூ.66.11 கோடியை வழங்க வேண்டும்.

சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே ரூ.280.74 கோடி செலவில் 4-ம் ரெயில் பாதை அமைப்பதற்கான ஒப்புதலை மத்திய அரசு வழங்கியிருந்தாலும், இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் பாதுகாப்புத் துறையின் ஒப்புதல் கிடைக்காததால் அந்தத் திட்டத்தைத் தொடங்க முடியவில்லை.

எனவே அந்த நிலத்தை தெற்கு ரெயில்வேயிடம் உடனே ஒப்படைப்பதற்கு இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் பாதுகாப்புத் துறைக்கு உத்தரவிட வேண்டும்.

எஸ்.டி. பட்டியலில் நரிக்குறவர்

நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். கூடங்குளம் அணு மின்நிலையத்தில் உள்ள அணுக் கழிவை (எஸ்.என்.எப்.) இங்கு தேக்கி வைக்காமல் மக்கள் நலன் கருதி ரஷ்யாவிற்கே திருப்பி அனுப்ப வேண்டும். நரிக்குறவர் அல்லது குருவிக்காரர் என்ற சமுதாய மக்களை தமிழ்நாட்டின் எஸ்.டி. பட்டியலில் சேர்ப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com