

சென்னை,
வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை சென்னை அருகே கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக சென்னையில் 40 முதல் 45 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என்றும் அதிக கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் சென்னையில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ள நிலையில், இன்று மாலை வரை மழை தொடரும் என்பதால், கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இது குறித்து பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
சென்னையில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வந்தாலும், இன்று பலத்த காற்று வீசக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக சாலைகளில் மரங்கள் சரிந்து வீழாமல் இருப்பதற்காக கிளைகளை அகற்றி சீர் செய்யும் பணிகள் செய்யப்பட்டுள்ளன.
பல்வேறு மாவட்டங்களில் மழை காரணமாக பயிர் சேதம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றிருக்கிறோம். மழை குறைந்த பிறகு இது குறித்த கணக்கெடுப்பு பணிகள் துவங்கப்படும்.
தமிழ்நாடு பேரிடர் மீட்பு படை மற்றும் மத்திய பேரிடர் மீட்பு படை அனைத்தும் தயார் நிலையில் உள்ளது. மழை பாதித்த இடங்களில் அவர்கள் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அனைத்து வகையிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். மழை குறைந்த பிறகு பாதிப்புகளை கணக்கீடு செய்து தேவைக்கேற்ப மத்திய அரசிடம் உதவி கேட்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.