உரிய கட்டுப்பாடுகள், பாதுகாப்புடன் எல்லா வணிக நிறுவனங்களும் இயங்க அனுமதிக்க வேண்டும் வணிகர் தின மாநாட்டில் தீர்மானம்

‘உரிய கட்டுப்பாடுகள் மற்றும் பாதுகாப்புடன் அனைத்து வணிக நிறுவனங்களும் இயங்க அனுமதிக்க வேண்டும்’, என சென்னையில் நடந்த வணிகர் தின மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
உரிய கட்டுப்பாடுகள், பாதுகாப்புடன் எல்லா வணிக நிறுவனங்களும் இயங்க அனுமதிக்க வேண்டும் வணிகர் தின மாநாட்டில் தீர்மானம்
Published on

சென்னை,

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் 38-வது வணிகர் தின மாநாடு இந்திய வணிகர் பேரிடர் விடியல் மாநாடு, எனும் பெயரில் சென்னை கே.கே.நகரில் உள்ள பேரமைப்பு அலுவலக வளாகத்தில் நேற்று நடந்தது.

மாவட்ட தலைவர் என்.டி.மோகன் தலைமையில், சென்னை மண்டல தலைவர் கே.ஜோதிலிங்கம் வணிக கொடியேற்றி மாநாட்டை தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து மாநிலத்தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமையில் நலிந்த வணிகர்களுக்கு நிதி-நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பொதுச்செயலாளர் வெ.கோவிந்தராஜூலு, பொருளாளர் ஏ.எம்.சதக்கத்துல்லா, கூடுதல் செயலாளர் வி.பி.மணி உள்பட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் நலச்சங்க நிறுவனர் கிருஷ்ணா ராதாகிருஷ்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.

வணிகர் நல வாரியம்

வணிகர் தின மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

* மத்திய, மாநில அரசுகள் நடைமுறைபடுத்தியுள்ள ஜி.எஸ்.டி வரி விதிப்பை முறைப்படுத்தி, எளிமைப்படுத்தி வரியில் தேவையான மாற்றங்களை கொண்டுவர வேண்டும்..

* வணிகர் நல வாரியத்தை முறைப்படுத்தி முழுமையாக செயல்படுத்திட வேண்டும்.

* பேரிடர் கால சட்டங்களை மேற்கோள்காட்டி வணிகர்களுக்கும், வணிக நிறுவனங்களுக்கும் விதிக்கப்படும் அபராதங்கள் தவிர்க்கப்பட வேண்டும்.

* பெட்ரோல்-டீசல் விலையை ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டுவர வேண்டும்.

* வங்கிப் பண பரிவர்த்தனைக்கான ஜி.எஸ்.டி வரியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

பட்டாசு தொழிலை காக்க நடவடிக்கை

* தேர்தல் ஆணைய நடவடிக்கைகளால் வணிகர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கப்பணம், தங்கம்-வெள்ளி, பாத்திரங்கள் உள்பட அனைத்து பொருட்களையும் நிபந்தனையின்றி உரிய வணிகரிடமே திருப்பித்தர வேண்டும்.

* சிவகாசி, விருதுநகர் பகுதிகளில் சட்டப்பூர்வமாக பட்டாசு தொழிலை காத்திட உடனடி நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

* பணிநேர நீட்டிப்பும், பரந்த பரப்பளவு உள்ள கடைகள் மட்டுமே கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், நோய்தொற்றை குறைக்கவும் பயன்படும். எனவே அனைத்து வணிக நிறுவனங்களும் உரிய கட்டுப்பாடுகள் மற்றும் பாதுகாப்புடன் இயங்கிட அரசு உடனடி அனுமதி வழங்க வேண்டும்.

இவை உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com