பெட்ரோல், டீசல் விலை உயர்வு; தமிழக காங்கிரஸ் தொடர் போராட்ட அறிவிப்பு

தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கண்டித்து 3 கட்ட தொடர் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு; தமிழக காங்கிரஸ் தொடர் போராட்ட அறிவிப்பு
Published on

சென்னை,

நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பெட்ரோல் ரூ.100 கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தமிழக காங்கிரஸ் சார்பில் சத்தியமூர்த்தி பவனில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தலைமை வகித்து பேசினார்.

இந்த கூட்டத்தில், செயல் தலைவர் விஷ்ணு பிரசாத், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, பொருளாளர் ரூபி மனோகரன், மகிளா தலைவி சுதா மற்றும் நிர்வாகிகள் கோபண்ணா, பொன்.கிருஷ்ணமூர்த்தி, ரங்கபாஷ்யம், ஆலங்குளம் காமராஜ், சுமதி அன்பரசு, மாவட்ட தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், சிவ ராஜசேகரன், நாஞ்சில் பிரசாத், டில்லி பாபு, அடையார் துரை கலந்து கொண்டனர்.

இதன்பின், கே.எஸ். அழகிரி செய்தியாளர்களிடம் கூறும்போது, தமிழக காங்கிரஸ் கட்சி வரும் 8ந்தேதி முதல் தொடர்ச்சியாக பல்வேறு போராட்டங்களை நடத்த இருக்கிறது. முதல் கட்டமாக பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கு முன்பாக அந்த போராட்டங்களை நடத்தி அங்கு வருபவர்களிடம் கையெழுத்து வாங்குகிற இயக்கம் வரும் 8ந்தேதி நடத்தப்படும்.

2வது கட்ட போராட்டம், ஒவ்வொரு தொகுதி தலைநகரங்களிலும் வரும் 12ந்தேதி சைக்கிள் பேரணி நடத்தப்படும். 3வது கட்ட போராட்டம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தடுப்பூசி வழங்குவதில் மத்திய அரசின் தவறான கொள்கைகள், எரிபொருள் விலை உயர்வினால் ஏற்பட்ட பணவீக்கம் உள்ளிட்ட மோடி அரசின் நடவடிக்கைகளை கண்டித்து காமராஜர் பிறந்த நாளான ஜூலை 15ந்தேதி சென்னையில் ஒரு பேரணியை நடத்துவது என்று முடிவு செய்துள்ளோம் என கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com