நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் என கூறிதம்பதியிடம் ரூ.3½ லட்சம் மோசடி; மந்திரவாதி கைது

நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என கூறி தம்பதியிடம் ரூ.3½ லட்சம் மோசடி செய்த மந்திரவாதியை போலீசார் கைது செய்தனர்.
நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் என கூறிதம்பதியிடம் ரூ.3½ லட்சம் மோசடி; மந்திரவாதி கைது
Published on

நாகர்கோவில்:

நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என கூறி தம்பதியிடம் ரூ.3 லட்சம் மோசடி செய்த மந்திரவாதியை போலீசார் கைது செய்தனர்.

நிதி நிறுவனம்

இரணியல் அருகே நெய்யூர் செட்டியார் மடம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வின். இவருடைய மனைவி சிந்துஜா (வயது 34). இவா நாகர்கோவிலில் உள்ள போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு மனு அளித்தார். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

எனக்கும், வெள்ளிச்சந்தை கல்லடி விளையைச் சேர்ந்த சைஜூ (36) மற்றும் அவருடைய மனைவி வனிதா ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டது. அவர்கள் வாஸ்து பூஜை மற்றும் பரிகார பூஜை செய்து வருவதாக என்னிடம் கூறினர். மேலும் திருவனந்தபுரத்தில் நிதி நிறுவனம் நடத்தி வருவதாகவும், அதில் முதலீடு செய்தால் வட்டி மூலமாக அதிக லாபம் கிடைக்கும் என்றும் தெரிவித்தனர்.

ரூ.3 லட்சம் மோசடி

இதை நம்பி ரூ.3 லட்சத்தை அந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தேன். ஆனால் முதலீடு செய்து பல மாதங்கள் ஆன பிறகும் வட்டி தரவில்லை. மேலும் முதலீடு செய்த பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை. அதோடு சைஜூ மற்றும் வனிதாவையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. எனவே நானும், என் கணவரும் திருவனந்தபுரம் சென்று விசாரித்த போது இல்லாத ஒரு பெயரில் நிதி நிறுவனம் நடத்துவதாக கூறி 2 பேரும் சேர்ந்து எங்களிடம் பணத்தை பெற்று மோசடி செய்தது தெரிய வந்தது. எனவே இதுதொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு தொடர்பாக விசாரணை நடத்த குற்றப்பிரிவுக்கு போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவிட்டார். அதன்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சைஜூவும், வனிதாவும் சேர்ந்து பணம் வாங்கி மோசடி செய்ததும், மாந்திரீக பூஜைகள் செய்து வந்ததும் தெரியவந்தது.

கைது

இதையடுத்து சைஜூ மற்றும் வனிதா ஆகியோர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து நேற்று முன்தினம் சைஜூவை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com