‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் தியாகராயநகரில் ரூ.40 கோடியில் தானியங்கி வாகன நிறுத்த கட்டிடம்

‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் சென்னை தியாகராயநகரில் ரூ.40.79 கோடி செலவில் அடுக்குமாடி கொண்ட தானியங்கி வாகன நிறுத்த கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் வாகனங்களை நிறுத்த எவ்வித கட்டணமும் கிடையாது.
‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் தியாகராயநகரில் ரூ.40 கோடியில் தானியங்கி வாகன நிறுத்த கட்டிடம்
Published on

ஸ்மார்ட் சிட்டி திட்டம்

மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்தால் இந்தியாவில் உள்ள 100 நகரங்களை ஸ்மார்ட் சிட்டியாக மாற்றும் திட்டத்தில் முதல் 20 நகரங்களில் ஒன்றாக சென்னை தேர்வு செய்யப்பட்டது. சென்னையில், இந்த திட்டத்தின் கீழ், பகுதி சார்ந்த மேம்பாட்டிற்காக தியாகராயநகர் தேர்வு செய்யப்பட்டது.

அந்தவகையில் பாண்டிபஜார் தியாகராய சாலையில் நடைபாதை வளாகம் அமைக்கப்பட்டது. இதன் ஒரு அங்கமாக பொதுமக்கள் மற்றும் வணிகர்களின் வாகனங்களை நிறுத்துவதை நெறிப்படுத்த 1,152 செ.மீ. பரப்பளவில் ரூ.40.79 கோடி செலவில் தியாகராயநகர் மற்றும் தணிகாச்சலம் சாலை சந்திப்பில் பல அடுக்கு கொண்ட தானியங்கி வாகன நிறுத்துமிடம் அமைக்கப்பட்டு, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியால் திறந்து வைக்கப்பட்டது.

இந்த தானியங்கி வாகன நிறுத்தம் 2 கீழ்தளம் மற்றும் 6 தளங்கள் கொண்ட கட்டிடமாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாகன நிறுத்த கட்டிடத்தில் உள்ள விளக்குகள் மற்றும் மின் உபகரணங்களுக்கு தேவையான மின்சாரத்தில் ஒரு பகுதி, கட்டிடத்தின் மேற்கூறையில் அமைக்கபட்டுள்ள 96 கிலோ வாட் திறன் கொண்ட சூரிய ஒளி தகடுகள் மூலம் பெறப்படுகிறது.

இந்த வாகன நிறுத்த கட்டிடம், 222 கார்கள் மற்றும் 513 மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் கார்கள் அனைத்தும் தானியங்கி முறையில் நிறுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

இங்கு பொதுமக்கள் தங்களது காரை நிறுத்த ஒரு மணி நேரத்துக்கு ரூ.20 கட்டணமும், மோட்டார் சைக்கிளுக்கு ஒரு மணி நேரத்துக்கு ரூ.5 கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. மேலும் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் எவ்வித கட்டணமும் வசூலிக்காமல் இலவசமாக பொது மக்கள் தங்களது வாகனங்களை நிறுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது என மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com